மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக திமுகதலைவர் கருணாநிதி மகன் மு.க.அழகிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரிக்கு மதுரை அருகே திருமங்கலம் என்ற பகுதியில் தயா எஞ்சினியரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரி அருகே இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 44 செண்ட் நிலத்தை, கல்லூரி நிர்வாகம் அபகரித்ததாக இந்து அறநிலையத்துறை அதிகாரி, மதுரை புறநகர் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு காவல்துறை அதிகாரியிடம் இன்று புகார் அளித்தார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் முத்துவிஜயன் பத்திரிகையாளர்களிடம் கூறினார். ஆனால் மு.க. அழகிரி மீது புகார் மனு வந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ள மதுரை போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் அழகிரியின் கல்லூரி அருகே நிலம் வைத்திருந்த ராமலிங்கம் என்ற விவசாயி ஒருவரும் அழகிரி மீது புகார் கொடுத்துள்ளதாகவும், செய்திகள் கூறுகின்றன.