டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் மாறன் சகோதர்களாகிய கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை, மலேசியா நிறுவனமான மேக்சிஸ் என்ற நிறுவனத்திற்கு குறைந்த விலைக்கு விற்க ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி வற்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் தன்னுடைய பெயரை சேர்க்கக்கூடாது என தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவை, நேற்று முன் தினம் சுப்ரீம் கோர்ட் நிராகரித்ததை தொடர்ந்து தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் உள்பட 9 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் 4 நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளன. ஊழல், சதித்திட்டம், மிரட்டல், பதவியை தவறாக பயன்படுத்துதல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளதாக இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி இந்த குற்றப்பத்திரிகை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.