பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், இந்தியா வெள்ளைக்கொடியை காட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்காது. தக்க பதிலடி கொடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கு இந்திய உள்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”பாகிஸ்தான் உள்பட அண்டை நாடுகளுடனும் அமைதியான நல்லுறவு மேற்கொள்ளவே இந்தியா விரும்புகிறது. ஆனால் அதற்காக பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்கும் இந்தியாவின் நிலைப்பாட்டை அண்டை நாடுகள் பலவீனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
பாகிஸ்தான் இனியும் அத்துமீறி தாக்குதல் நடத்தினால், இந்தியா வெள்ளைக் கொடியை காட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்காது. எல்லைப் பாதுகாப்புப் படையின் ஜெனரலிடம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ளேன். இந்தியா 15 இடங்களில் வெள்ளைக் கொடியை கட்டி இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இனியும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், இந்தியா வெள்ளைக் கொடியை காண்பிக்காது. திருப்பி தக்க பதிலடி கொடுக்கும்” என்றார்.
இதனால் இந்திய பாகிஸ்தான் நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.