கத்தி படத்தின் முதல் பாதி முழுவதும் முடிந்துவிட்டது என்றும், இரண்டாவது பாதியின் பெரும்பகுதியான படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் கத்தியின் டீஸர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்றும் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கத்தி’ திரைப்படம் குறித்து முருகதாஸ் இன்று காலை டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். துப்பாக்கி படத்தைவிட பலமடங்கு சிறப்பாக கத்தியின் முதல் பாகம் அமைந்துள்ளதாகவும், இரண்டாவது பாதியின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இன்னும் சில நாட்களில் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்தவுடன் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
‘கத்தி’ திரைப்படம் குறித்து ஊடகங்களில் வெளியாகும் தவறான வதந்திகளை ரசிகர்கள் யாரும் நம்பவேண்டாம் என்றும், கத்தியின் ரிலீஸை தடுக்க எந்த சக்தியாலும் முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸின் டுவிட்டர் கருத்துக்கு நூற்றுக்கணக்கானோர் வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர். மேலும் எந்த சக்தியாலும் முடியாது என்று கூறிய முருகதாஸிடம் ‘சக்தி’ என்பது யாரை குறிக்கின்றது என்று ஒருசிலர் வில்லங்கமாக கேள்வி கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.