மூன்று மாநகராட்சிகள் உள்பட தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக திமுக ஏற்கனவே அறிவித்த நிலையில் மதிமுகவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக நேற்று சென்னையில் அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்ய போதுமான கால அவகாசம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளதாகவும், மாநில அரசுக்கு சாதகமான முடிவுகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து எடுத்து வருவதால் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் மதிமுகவின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஈழத் தமிழர் தாயகத்தில் திணிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்றி, சிறை முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டு, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு ஈழத்தமிழர்களின் பூர்வீக தாயகத்திலும், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் ஐ.நா.வின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ம.தி.மு.க. சார்பில், செப்டம்பர் 9 ஆம் தேதி பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் தலைநகர் சென்னையில் கண்டன அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது” என்றும் அச்செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.