ஐந்து நாட்கள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றிருந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று தாயகம் திரும்பினார். அவரை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.
கடந்த 30ஆம் தேதி ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் தரப்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பானின் ஸ்மார்ட் நகரமான கியோட்டோவில் இருநாட்டு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்தியாவின் வாரணாசியை ஸ்மார்ட் நகராக ஆக்குவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையெழுத்தானது.
பின்னர் ஜப்பான் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது, பரஸ்பர பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பது, சர்வதேச பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
மேலும் இந்தியாவில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி முதலீடு செய்ய ஜப்பான் ஒப்புக்கொண்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் புல்லட் ரயில் திட்டமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜப்பான் தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். நிறைவாக, ஜப்பானில் வாழும் இந்தியர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி, தனது ஜப்பான் பயணம் வெற்றி அடைந்ததாகவும், இந்தியா மீது ஜப்பான் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.