ஈராக் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலுக்கு பதிலடியாக, மற்றொரு அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரின் கழுத்தை அறுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
ஈராக்கின் பல பகுதிகளை ஆக்கிரமித்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை தாக்க ஈராக் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமெரிக்க ராணுவம் விமானம் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை தாக்கி வருகிறது. இதற்கு பழிவாங்குவதற்காக கடந்த வாரம் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரின் கழுத்தை அறுத்து தீவிரவாதிகள் கொலை செய்து அதன் வீடியோவை இணையத்தில் வெளியிட்டனர். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று மற்றொரு பத்திரிகையாளரை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இந்த கொலை குறித்த வீடியோ நேற்று உலகம் முழுவதும் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பேசிய தீவிரவாதி ஒருவன். “அமெரிக்கா எங்கள் நாட்டின் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்தும் வரை நாங்களும் எங்கள் தாக்குதலும் தொடருவோம். ஒபாமா தாக்குதலை நிறுத்தினால்தான் அமெரிக்க மக்களை நாங்கள் கொல்வதை நிறுத்துவோம் என்று கூறியுள்ளான். பின்னர் கத்தியை எடுத்து அமெரிக்க பத்திரிகையாளரின் கழுத்தை அறுக்கும் கொடூர காட்சி அந்த வீடியோவில் உள்ளது.
கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளரின் பெயர் ஸ்டீவன் ஸ்டோலப் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கூறிய வீடியோ பதிவுகளின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்