ஆப்கானிஸ்தான் நாட்டை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் தீவிரவாதம் செய்து வரும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நேற்று ஆப்கனில் தெரிவித்துள்ளார்.
அல்கொய்தாவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இது குறித்த விடியோ தகவல் ஒன்று நேற்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் “இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியும், ஜிகாத் கொடியும் ஏற்றிவைக்கப்படும் என கூறியுள்ள அல்கொய்தா தலைவர், இஸ்லாமியர்களை பிரித்து வைத்துள்ள எல்லைகளை அல்கொய்தா அமைப்பு ஒன்றிணைக்கும் என கூறியுள்ளார்.
இந்தியாவில் செயல்படும் தங்கள் இயக்கம், இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்தும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று ஜவஹிரி கூறியுள்ளார்.
மேலும், மியான்மர் மற்றும் வங்கதேசத்திலும் தாங்கள் போர் தொடுப்போம் என தெரிவித்துள்ள அவர், தலிபான் இயக்க தலைவரான ஒமர் அப்துல்லாவுக்கு தான் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
சன்னி இஸ்லாமியர்களால் உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு, ஈராக் மற்றும் சிரியாவில் சண்டையிட்டு வரும் நிலையில், அல்கய்தா அமைப்பு தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுவதாக கூறப்படுகிறது