தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இருந்து திருடப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்லப்பட்ட இரண்டு சிலையை இந்திய பிரதமர் மோடியிடம் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் நேற்று ஒப்படைத்தார்.
இந்தியாவில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நேற்று டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார். நேற்று மும்பையில் நடந்த தொழில் முதலீட்டார்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது இரு தலைவர்களும் இரு நாடுகள் நட்புறவு, பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியான பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.
இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டு இருந்த வெண்கல நடராஜர் சிலை மற்றும் அர்த்தநாரீஸ்வரர் கற்சிலையை ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த 2 சிலைகளில் நடராஜர் சிலை அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் இருந்து 2006ஆம் ஆண்டு திருடப்பட்டது. 1050 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிலையின் மதிப்பு ரூ.31 கோடி ஆகும். இந்த சிலை கான்பெர்ரா நகரில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் ஒப்படைக்கப்பட்ட மற்றொரு சிலை அர்த்தநாரீஸ்வரர் கற்சிலை ஆகும். இது விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருதகிரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்டது. 1,700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலையின் சர்வதேச மதிப்பு ரூ.3 கோடி. இந்த சிலை நியுசவுத் வேல்ஸ் நகரில் உள்ள கலைக் கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சி குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் “இது போன்ற விஷயங்களில் நல்ல குடிமகனாக ஆஸ்திரேலியா நடந்து கொள்ளும் என்பதற்கு சிலைகள் ஒப்படைப்பு நிகழ்ச்சி ஒரு சான்றாகும். மேலும் இந்தியா உடனான நட்புறவுக்கு ஆஸ்திரேலியா எப்போதும் முக்கியத்துவம் அளிக்கிறது என்பதையும் இது உணர்த்துகிறது“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.