பாமர மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு வீட்டு மனை வாங்கி வருகிறார்கள். காரணம், வீட்டு மனை மூலம் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புதான். 15 ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு லட்சம் ரூபாய் தந்து வாங்கிய காலிமனை இன்றைக்கு 30 லட்சத்துக்கும் 40 லட்சத்துக்கும் விலைபோவதைப் பார்க்கும் மக்கள், இனிவரும் காலத்திலும் அப்படி ஒரு லாபம் கிடைக்கும் என்று நினைத்து காலி மனைகளை வாங்குகிறார்கள்.
மக்களின் இந்த எதிர்பார்ப்பைப் பயன்படுத்தி லாபம் பார்க்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு முழுக்க ஏராளமான ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் புதிது புதிதாக முளைத்து, பல லே-அவுட்டுகளைப் போட்டுவருகின்றன.
குறையும் ச.அடி!
பத்தாண்டுகளுக்குமுன் மனை லே-அவுட்டில் குறைந்தபட்ச மனை அளவு 1,200 சதுர அடியாக இருந்தது. ஐந்தாண்டுகளுக்குமுன் இது 800 ச.அடியாகக் குறைந்தது. பிற்பாடு இது 600 ச.அடியாகக் குறைந்து, இப்போது வெறும் 400 அடிக்குக்கூட பிளாட்களைப் போட்டு விற்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி மனை அளவைக் குறைப்பதால், மனைக்கான தொகையும் குறைந்து விடுகிறது. இதனால் சாதாரண மனிதர் கள்கூட மனை வாங்கக்கூடியதான நிலை உருவாகிவிடுகிறது. மேலும், மாத தவணை என்கிறபோது முன்பணம் ரூ.10,000, ரூ.15,000 வாங்கிக்கொண்டு, மீதிப் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கட்டச் சொல்கிறார்கள்.
ரியல் எஸ்டேட் (சதுரங்க) வேட்டை!
மனைகளை மாத தவணைத் திட்டத்தின் மூலம் விற்பதில் ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி, ஆரணி, ஶ்ரீபெரும்புதூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கானவர்களிடம் சதுரங்க வேட்டை சினிமாவில் வருவதுபோல் ஒரு மெகா மோசடி நடந்திருக்கிறது. இந்த மோசடி குறித்த தகவல்கள் சினிமாவைப்போலவே படுசுவாரஸ்ய மானவை.
வெறும் 100 மனைகளுக்கான லே-அவுட்டைப் போட்டுவிட்டு, ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் தவணைத் தொகை வசூலிக்கப் பட்டிருக்கிறது. இந்த நூறு மனைகளையும் முழுப் பணமும் கட்டியவர்களுக்குப் பத்திரம் பதிவு செய்து தந்துவிட்டு, லே-அவுட் போட்ட புரோமோட்டர் எஸ்கேப் ஆகி இருக்கிற கொடூரம் காஞ்சிபுரத்தில் நடந்திருக்கிறது.
மூன்று லே-அவுட்களில் 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக எஸ்எஸ் அசோசியேட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரை காஞ்சிபுரம் போலீஸ் தேடி வருகிறது. இவர் ஆற்காடு வட்டம் மேல்நேத்தபாக்கம் உள்ளிட்ட இடங்களில் போட்ட தவணைமுறை திட்டத்தில் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி இருக்கிறார்.
இந்தத் திட்டங்களில் சேர்ந்து, தவணைத் தொகையைக் கட்டி வருபவர் களில் பலருக்கு ரியல் எஸ்டேட் அதிபர் தலைமறைவாகி இருப்பதுகூடத் தெரியவில்லை. அவர்கள் இப்போதும் தவணைத் தொகையை ஏஜென்ட்டு களிடம் ‘கர்மசிரத்தையாக’க் கட்டி வருகிறார்களாம். இவர்கள் புரோமோட்டர் சதீஷ் மீது இதுவரை புகார் கொடுக்காமலே இருக்கிறார்களாம்.
ஏமாளி இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள்!
பொதுவாக, இதுபோன்ற லே-அவுட் புரோமோட்டர்கள் மனைகளை விற்பதற்கு வேறு யாரையும்விட ஆயுள் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகளையே தேர்வு செய்கிறார்கள். ஒரு மாத தவணை 1,500 ரூபாய் எனில், அதில் ஏஜென்ட் கமிஷன் 500 ரூபாய் எடுத்துக்கொண்டு மீதியுள்ள 1,000 ரூபாயை ரியல் எஸ்டேட் கம்பெனிக்குக் கட்டினால் போதும் என்று சொல்லிவிடுவதால், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் வேறு எதையும் யோசிக்காமல், கண்ணைக் கட்டிக்கொண்டு கிணற்றில் விழத் தயாராகிவிடுகிறார்கள்.