கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதுவரை மழை வெள்ளத்தினால் சுமார் 160 பேர் வரை பலியாகியுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றது. அங்குள்ள செனாப், தாவி, ரவி, ஜீலம் உள்ளிட்ட ஆறுகளில் கரைபுரண்டு வெள்ளநீர் ஓடுகிறது. அபாய கட்டத்தையும் தாண்டி வெள்ளம் செல்வதால் கரையோர பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் மின் கம்பங்கள், தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளதால் மாநிலம் முழுவதும் மின்சாரம் தடைபட்டு இருளில் மூழ்கியுள்ளது. தகவல் தொடர்பும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளதால் மீட்புப்பணிகளை கவனிப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.. ஸ்ரீநகரில் பெரும்பாலான கட்டடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இந்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ராணுவமும், விமானப்படையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 75 முதல் 100 வீரர்களை கொண்ட 184 குழுவினர் மீட்புப்பணிகளில் 24 மணிநேரமும் ஈடுபட்டு வருகின்றானர்.
வெள்ளப் பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்காக 29 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் மூலம் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்தியா–பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 180–க்கும் மேற்பட்ட வீரர்களும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். இதற்கிடையே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மேலும் 100 படகுகள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கூடுதலாக 5 பேரிடர் மீட்புக்குழுவினரும், மருத்துவ குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் வெள்ளப்பகுதிகளை நேற்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு ரூ.1,000 கோடி சிறப்பு நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.