அமெரிக்காவை சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் லெபனான் ராணுவ வீரர் ஒருவர் ஆகியோர்களின் தலையை வெட்டி கொடுஞ்செயல் செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை கூண்டோடு அழிக்க அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த இஸ்லாமிய தேசமாக ஈராக் மற்றும் சிரியா நாடுகளை மாற்றும் முயற்சியில் அந்தந்த நாடுகளின் அரசுக்கு எதிராக தீவிரவாத போராட்டம் செய்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினரை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் அமெரிக்க பத்திரிகையாளர்கள் இருவரை கழுத்தை அறுத்து கொலை செய்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டனர். இதனால் அமெரிக்க அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க செனட் உறுப்பினர்களுடன் ஒபாமா ஆலோசனை செய்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது , “எங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதிகள், உலகில் எங்கு இருந்தாலும் அவர்களை வேட்டையாடுவோம். இது எனது தலைமையிலான அரசின் அடிப்படை கொள்கையாகும். அமெரிக்காவிற்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், உங்களுக்கு பாதுகாப்பான புகலிடத்தை கண்டுபிடிக்க முடியாது” என்று தீவிரவாதிகளுக்கு ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆலோசனைக்கூட்டாம் முடிந்தவுடன் சிரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வெளி தாக்குதல் நடத்த அமெரிக்கா அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். அவருடைய உத்தரவை தொடர்ந்து நேற்று இரவே சிரியாவில் அமெரிக்கா விமானங்கள் தாக்குதலை தொடங்கியுள்ளது.