டெல்லி மற்றும் ஆந்திர மாநில அரசு அதிகாரிகள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தை நேற்று பார்வையிட்டனர். தமிழகத்தில் 203 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஏழைகளின் பசியை போக்க மிகக்குறைந்த உணவுகள் தரமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் வயிறார சாப்பிடுவதற்காக அம்மா உணவகங்களை தொடங்கி வைத்தார். முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் மாநகராட்சி சார்பில் தற்போது 203 அம்மா உணவகங்களை திறந்து செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று தெற்கு டெல்லி மாநகராட்சி பொது சுகாதாரத்துறையின் கூடுதல் மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.கே.பால், சமுதாய சேவைத்துறையின் துணை இயக்குனர் யோகேந்திரபாபு, துணை கணக்கு கட்டுப்பாட்டாளர் எஸ்.பி. பிள்ளை, செயற்பொறியாளர் அஜய் அகர்வால் ஆகியோர் அடங்கிய குழு மற்றும், ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ஜே.சீனிவாசலு மற்றும் துணை செயற்பொறியாளர் எஸ்.சதீஷ்சந்தர் ஆகியோர் கொண்ட குழு ஆகியவை இணைந்து அம்மா உணவகங்களின் செயல்படும் விதம் குறித்து மேயர் சைதை துரைசாமியிடம் கேட்டு அறிந்தனர். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தைப் பார்வையிட்டனர். அங்குள்ள பொருள்கள் வைக்கும் அறை, சமையலறை, சாப்பாடு வழங்கும் இடம், சாப்பிடும் அறை, பாத்திரங்கள் கழுவும் அறை ஆகியவற்றை பார்த்தனர்.
தமிழக முதல்வரின் இந்த திட்டம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் ஆந்திர மாநிலத்தில் துவங்க உள்ளதாகவும், விரைவில் டெல்லியிலும் துவங்க உள்ளதாகவும் பார்வையிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்படும் விதத்தை நேரில் பார்த்த அந்த குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.