திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கான ‘டெபாசிட்’ கட்டணம் உயர்த்தப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்த போது, “திருப்பதி ஏழுமலையான் கோவிலிக்கு ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக திருமலை- திருப்பதியில் தேவஸ்தானம் சார்பில் ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.250 கட்டணத்தில் சுமார் 7 ஆயிரம் விடுதி அறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் ஏராளமான இலவச விடுதி வசதிகளும் உள்ளன. இதுதவிர லும் தங்கும் விடுதிகள் உள்ளன.
கட்டணம் செலுத்தி அறையில் தங்கும் பக்தர்களிடம் டெபாசிட் தொகையாக ரூ.350 இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தன. பக்தர்கள் தங்கள் அறைகளை காலி செய்யும்போது இந்த டெபாசிட் தொகை பக்தர்களிடம் திருப்பி அளிக்கப்பாடும். ஆனால், ஒருசில தாங்கள் தங்கிய அறையின் பூட்டு மற்றும் சாவியை ஒப்படைக்காமலும், டெபாசிட் தொகையை திரும்ப வாங்காமலும் அவசரத்தில் சென்றுவிடுகின்றனர். மேலும் சிலர் அறையில் உள்ள பொருட்களை சேதப்படுத்திவிட்டு, தகவல் தராமல் சென்றுவிடுகின்றனர். இதனால், தேவஸ்தான விடுதி ஊழியர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இவ்வாறானபிரச்சினைகளை சமாளிக்க விடுதி அறைக்கான டெபாசிட் தொகையை அதிகரிக்க தேவஸ்தான மத்திய வரவேற்பு அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தேவஸ்தான உயர் அதிகாரிகள் அனுமதியோடு வருகிற 15-ந் தேதி முதல் விடுதி அறைகளுக்கான கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. விடுதி அறைகளின் குறைந்த பட்ச டெபாசிட் தொகை ரூ.500 ஆக உயருகிறது.