பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, சென்னையின் முக்கிய இடங்களை தகர்க்க தீட்டிய சதித்திட்டம் தற்போது வெளியாகியுள்ளது.
நேற்று முன் தினம் கைதான பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனிடம் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கையை சேர்ந்த இவர் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் தொடர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் உளவு அமைப்பு அதே போன்ற ஒரு தாக்குதலை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
இலங்கையை மையமாக வைத்து பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், பாஸ் என்ற ஷா ஆகியோர் இந்த சதி வேலைக்கு தலைமை தாங்கி செயல்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
சென்னையில் உள்ள தலைமைச்செயலகம், அமெரிக்க தூதரகம், கல்பாக்கம் அணுமின்நிலையம், சென்டிரல் ரெயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை, பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம், போன்ற 20 இடங்கள் தாக்குதலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும் தீவிர பயிற்சி அளிக்கப்பட்ட 20 தீவிரவாதிகள் சென்னைக்குள் ஊடுருவி இருப்பதாகவும், தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் அந்த தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.