அமைச்சர்கள் கூட்டம் என்றாலே பைல்கள், பேப்பர்கள், குறிப்பெடுக்கும் நோட்டுக்கள் என இருந்த நிலை மாறி தற்போது அனைத்து அமைச்சர்களும், அமைச்சரவை கூட்டத்தில் லேப்டாப்புடன் வரும் இ அமைச்சரவை கூட்டம் நடைபெறும் காலம் வந்துவிட்டது. இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஹைடெக் முதல்வர் என்ற பெயர் பெற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுதான்.
சந்திரபாபு பதவியேற்று 100 நாட்கள் ஆனதையொட்டி ஒரு சிறப்பு அமைச்சரவை கூட்டத்தை நேற்று கூட்டினார். இந்த அமைச்சரவை கூட்டத்தில் கல்ந்து கொள்ள வந்திருந்த அமைச்சர்கள் தங்களுடன் காகித கோப்புகள் மற்றும் குறிப்பெடுக்கும் நோட்டுக்கள் எதையும் கொண்டுவரவில்லை. அனைத்து அமைச்சர்களின் கையிலும் லேப் டாப், ஐ பேட் ஆகிய நவீன தொழில்நுட்ப வசதியுள்ள தகவல்தொடர்பு சாதனங்கள் இருந்தது. முதல்வர் சொல்லும் கருத்துக்களை அதில் குறிப்பெடுத்துக்கொண்டு சேவ் செய்தனர்.
எந்த ஒரு காகித கோப்புகளோ அல்லது துண்டு சீட்டுகளோ இல்லாமல் லேப் டாப், ஐ பேட் போன்றவற்றை மட்டும் வைத்துக்கொண்டு நாட்டின் முதல் இ – கேபினட் கூட்டத்தை நடத்தி அசத்தி உள்ளார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
இந்த அமைச்சரவை கூட்டம்தான் இந்தியாவின் முதல் இ கேபினட் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. அமைச்சர்களுக்கு என தனியாக ஒரு ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அனைத்து அமைச்சர்களும் தங்களுக்கு தேவையான தகவல்களை உடனடியாக பெறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தனித்தனி பாஸ்வேர்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அமைச்சர்களின் ரகசிய முடிவுகள் அவர்களின் கவனத்தை மீறி வெளியே செல்ல முடியாது.
இதுநாள் வரை தன்னை மட்டுமே ஹைடெக் முதல்வராக காட்டி வந்த நாயுடு, தற்பொழுது தனது அமைச்சர்களையும் அவ்வாறு மாற்ற முயன்று வருகிறார். ஆனால் அவர்களில் எத்தனை பேர் முதல்வரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நவீன தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதுதான் கேள்விக்குறி!