உள்ளாட்சி தேர்தலுக்கு பின் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும். தமிழிசை செளந்தர்ராஜன்

tamilisaiஉள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிடும் ஒரே கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சிக்கு ஈடுகொடுத்து பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்பட்டு வருகின்றனர். மிரட்டலையும் மீறி 80க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பல்வேறு அசாதாரண சூழல் உருவாகியுள்ளதால் உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்து, புதிய தேதி அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்து உள்ளோம். ஆனாலும், ஜனநாயகத்தை காக்க தேர்தல் களத்தில் உள்ளோம்.

தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, மாநகராட்சித் தேர்தலில் தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும், பா.ஜ.க.வுக்கு மத்தியில் ஒரு நிலைப்பாடு, மாநிலத்தில் ஒரு நிலைப்பாடு என்றும் பேசியுள்ளார். இது முற்றிலும் தவறான கருத்து. தமிழக மீனவர் பிரச்னையில் அவர் கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருந்துவிடுகிறார்.

ஆனால், நாங்கள் பா.ஜ.க. மாநிலப் பொதுச்செயலர் சரவணப்பெருமாள் தலைமையில் ஒரு குழு அமைத்து, மீனவர்களிடம் கருத்துகளை பெற்று, அந்த அறிக்கையை வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் அளித்துள்ளோம். அறிக்கையை பெற்றுக்கொண்ட அவர், தமிழக மீனவர் பிரச்னையை நன்கு உணர்ந்திருப்பதாகவும், இதுகுறித்து உறுதியான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். மீனவர்கள் பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காண பாஜக தொடர்ந்து போராடி வருகிறது.

பா.ஜ.க. மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற அர்த்தத்தில் முதல்வர் பேசி வருகிறார். தேசியக் கட்சி மாநகராட்சியை ஆள வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு? நகராட்சியில் நல்லாட்சி என்ற முழக்கத்தோடு தேர்தலை நாங்கள் சந்தித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலில் ஒதுங்கி இருக்கும் கட்சிகளின் தொண்டர்கள் பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்” என்றார்.

Leave a Reply