புண்ணியம் தரும் புனித புரட்டாசி மாதம் குறித்து ஒரு சிறு விளக்கம்.

tirupati-golden-temple

‘பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் புரட்டாசியில்’ என்பார்கள். அதாவது, புரட்டாசி மாதத்தில் பகல் பொழுதினில் தங்கம் உருகும் அளவிற்கு கடுமையான வெயில் காய்ந்து, இரவினில் மண் உருகி வழிந்தோடும் அளவில் நல்ல மழை பெய்யும் என்பது இதன் பொருள். இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர். புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு.

இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் நெற்றி நிறைய திருமண் இட்டு பாத்திரம் ஏந்தி வீடு வீடாகச் சென்று ‘நாராயணா, கோபாலா…’ என்று அவன் நாமத்தை உச்சரித்து பிக்ஷை எடுத்த அரிசியினை அரைத்து அதில் மாவிளக்கு மாவு இட்டு பெருமாளை சேவிப்பதை இன்றும் கிராமப்புறங்களில் காணமுடியும். கடந்த 10 ஆண்டுகளுக்குள் நாகரிகம் என்ற பெயரால் நகரங்களில் இந்தப் பழக்கம் காணாமல் போய்விட்டது! நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான். புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில்.

எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார். சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான். புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கர-நாராயணர் இணைவாகக் கருதப்படுகிறது. சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன் பெயர் பெற்ற காரணமும் இதுவே.

இதன் மூலம் அரியும், சிவனும் ஒன்று என்ற கருத்து நமக்கு நன்றாக புலப்படுகிறது. எனவேதான் புரட்டாசி மாதத்தில் சைவ, வைணவ பேதம் இன்றி பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவினை தவிர்த்து சைவ உணவினையே உட்கொள்கின்றனர். அறிவியல் ரீதியாக ஆராய்ந்தால் புரட்டாசி மாதத்தில் பகல் பொழுதினில் காற்றினில் ஈரப்பதம் குறைந்து உஷ்ணமாக உணர்வோம். அதோடு வெயிலும் கடுமையாக இருக்கும். இந்த நேரத்தில் அசைவ உணவினை உட்கொள்வதால் வயிறு சார்ந்த உபாதைகளுக்கு ஆளாவோம் என்பதை உணர்ந்தே நம் முன்னோர்கள் அசைவத்தை புரட்டாசியில் தவிர்த்தனர் என்றும் சொல்வார்கள்.
1383957_10202342439822027_1090174260_n
புரட்டாசி மாதத்தை ஒட்டிய காலகட்டத்தில் சுக்கிரன் என்ற கோள் கன்னியில் வந்து அமர்வார். மருத்துவ ஜோதிடத்தில் சுக்கிரனை கண்பார்வைக்கு உரிய கோள் என்பார்கள். சுக்கிரன் கன்னி ராசியில் நீச பலத்துடன் அமர்வதாலும், சூரியனோடு இணைந்து அஸ்தமனம் பெறுவதாலும் இந்த நேரத்தில் கண்நோய் சார்ந்த உபாதைகள் மனிதர்களை தாக்குவதையும் பார்த்திருப்போம். ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படும் ஒருவித கண்நோய் பெரும்பாலும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நம்மைத் தாக்குவதை அனுபவ பூர்வமாகக் கண்டிருப்போம்.

சூரியன், புதன், சுக்கிரன் சேர்ந்து சந்திரனின் தீட்சண்யமும் இணையும் காலத்தில் நல்ல மழை பெய்யும் என்பது ஜோதிட விதி. இதனால்தான் பகல்பொழுதில் கடும் வெயில் காய்ந்தாலும், புரட்டாசி மாத இரவு நேரத்தில் அதிகமான மழையும் பெய்கிறது. ஒரே நாளில் மாறுபட்ட தட்பவெப்ப நிலையை எதிர்கொள்ளும் மனிதன் அதற்கேற்றவாறு தனது உடல்நிலையையும் பராமரிக்க வேண்டி உள்ளது. அதனாலேயே உணவுப் பழக்க வழக்கத்திலும் கட்டுப்பாடு என்பது அவசியமாகிறது. மகாவிஷ்ணுவின் அம்சம் புதன் என்று வேதம் சொல்கிறது.

அவ்வாறு இருக்க புரட்டாசியில் புதன்கிழமைதானே முக்கியத்துவம் பெறவேண்டும், மாறாக சனிக்கிழமை சிறப்பு பெறக் காரணம் என்ன? பொதுவாக பெருமாளின் அடியவர்கள் மீது சனி பகவான் தனது முழு தாக்கத்தையும் காண்பிப்பதில்லை, மேலும் புரட்டாசி சனிக்கிழமை அன்று அவரது வீரியம் குறைந்திருக்கும் என புராணங்கள் உரைக்கின்றன. சனிக்கிழமையில் பெருமாளை சேவிப்போரை சனி ஒன்றும் செய்வதில்லை என்ற நம்பிக்கையினால்தான் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் சிறப்பு பெற்றுள்ளது. சனியின் பாதிப்பு இல்லாதவர்கள் புரட்டாசி புதன்கிழமையிலும் மாவிளக்கு மாவு இட்டு பெருமாளை சேவிக்கலாம்.

புரட்டாசியில் வரும் அமாவாசை, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முன்னர் வரும் 15 நாட்களை மஹாளய பட்சம் என்று சொல்வார்கள். ‘மறந்தவனுக்கு மாளயத்தில் கொடு’ என்ற பேச்சுவழக்கினைக் கேட்டிருப்போம். இறந்துபோன நம் பெற்றோர்கள் மட்டுமல்லாது, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமன், மாமி, சகோதரன், சகோதரி, ஆசிரியர், சிஷ்யன், நண்பன் என நாம் அறிந்தவர்களில் இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக் கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து தர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும் காலமே இந்த மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த 15 நாட்களும் முன்னோர்களின் நினைவாக சுபநிகழ்வுகளைத் தவிர்த்து அவர்களுக்குரிய சிராத்தம், தர்ப்பணம் ஆகியவற்றைச் செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை. 15 நாட்களும் முடியவில்லை என்றாலும், மஹாளய அமாவாசை நாளில் மட்டுமாவது முன்னோர்களின் நினைவாக விரதம் இருந்து தர்ப்பணம் செய்வதோடு ஏழை, எளியோர், ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்வதால் புண்ணியம் கிட்டும்.
tirumala-temple-view
இதற்கும் மகாபாரதக் கதை ஒன்று ஆதாரமாகச் சொல்லப்படுகிறது. தான தர்மங்களில் தன்னிகரற்று விளங்கிய கர்ணன் இறந்த பிறகு சொர்க்கலோகம் சென்றானாம். அங்கே அவன் செய்த தான தர்மங்களின் பலனாக தங்கமும், வெள்ளியும், இதர ரத்தினங்களும் மலை மலையாகக் கிடைத்ததாம். ஆனால், அவனுக்கு சாப்பிடுவதற்கு உணவு மட்டும் கிடைக்கவில்லை. காரணம் இதுதான் – அவன் எத்தனையோ தான தருமங்கள் செய்திருந்த போதிலும் தான் வாழ்ந்த காலத்தில் அன்னதானம் மட்டும் செய்திருக்கவில்லை.

தன் தவறை உணர்ந்த கர்ணன் தர்மராஜனின் அனுமதி பெற்று பூலோகத்திற்கு திரும்ப வந்து 14 நாட்கள் ஏழை, எளியோர்க்கும், முதியோர்க்கும் அன்னதானம் செய்ததோடு தனது முன்னோர்களுக்கு உரிய கடன்களை எள்ளும் தண்ணீரும் இறைத்து பூர்த்தி செய்து மீண்டும் சொர்க்கம் திரும்பியதாக மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த 14 நாட்களுடன் இறுதி நாளான அமாவாசையையும் சேர்த்து மொத்தம் 15 நாட்களும் மஹாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது. பிரதி மாதம் வருகின்ற அமாவாசை என்பது சூரிய, சந்திரனின் சேர்க்கையைக் குறிக்கும்.

பிதுர்காரகனான சூரியனும், மாதுர்காரகனான சந்திரனும் விஷ்ணு லோகம் என்று கருதப்படும் கன்னி இராசியில் ஒன்றிணையும்போது வரும் அமாவாசையே மஹாளய அமாவாசை. பிற மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் முன்னோரை வணங்க மறந்தவர்களும், சந்தர்ப்பம் சரியாக அமையாதவர்களும் கூட இந்தப் புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்ய, பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி புண்ணியம் அடைவர். ஜாதகத்தில் பிதுர்தோஷம் உள்ளது என்று ஜோதிடர்களின் மூலம் தெரிந்து கொண்டவர்கள் மஹாளய அமாவாசை நாளில் அன்னதானம் செய்ய தோஷம் நீங்கி நலம்
பெறுவார்கள்.

பிதுர்காரியம் முடிந்தவுடன் தேவகாரியம் துவங்கும் என்பதை உணர்த்தும் வகையில் மஹாளய அமாவாசைக்கு மறுநாளில் இருந்து நவராத்திரி என்றழைக்கப்படும் அம்பிகைக்கு உரிய திருவிழாவானது வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். நவராத்திரியின் இறுதியில் வரும் ஆயுதபூஜை விழா எத்தனை மகத்துவம் வாய்ந்தது என்பது நாம் அறிந்ததே. இவ்வாறு தெய்வத்தினையும், முன்னோரையும் ஆராதனை செய்து புண்ணியம் தேடுவதால் புரட்டாசி என்பது புனிதமான மாதமாக நம்மால் கொண்டாடப்படுகிறது என்றால் அது மிகையில்லை.

இந்த வருடம் வரும் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மிகவும் அரியதாகும். 4.10.2014 அன்று பெருமாளுக்கு உரிய ஏகாதசி திதியும், பெருமாளின் திருநட்சத்திரமான திருவோணமும், மூன்றாவது சனிக்கிழமையும் ஒன்றாக இணைந்து வருகிறது. இந்த நாளில் வீடுகளில் மாவிளக்கு மாவு இட்டு பூஜை செய்வதோடு அருகிலுள்ள ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளுடன் கூட்டுப் பிரார்த்தனை செய்ய நாடு நலம் பெறும், நாமும் வளமடைவோம்.

Leave a Reply