திருப்பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலின் பிரம்மோத்ஸவ நாட்களில் சிபாரிசு கடிதங்கள் கொண்டு வரும் நபர்களுக்கு வாடகை அறைகள் கொடுக்கப்பட மாட்டாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சீனிவாசராஜூ அவர்கள் நேற்று அறிவித்துள்ளார்.
திருப்பதி திருமலையில், செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள வருடாந்திர பிரம்மோத்ஸவத்திற்கான முன்னேற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று இந்த ஏற்பாடுகளை திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி சீனிவாசராஜூ அவர்கள் நேரில் பார்வையிட்டார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “பிரம்மோத்ஸவ நாட்களில் பக்தர்களின் வசதிக்காக சுமார் 10 லட்சம் லட்டுக்கள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், பிரம்மோத்ஸவ நாள்களில் சிபாரிசு கடிதங்களுக்கு, வாடகை அறைகள் வழங்கப்பட மாட்டாது. எனவே பக்தர்கள் யாரும் சிபாரிசு கடிதங்களுடன் அறைகள் பெற தேவஸ்தானத்தை அணுகவேண்டாம்.
பிரம்மோத்ஸவ நாள்களில் நடைபெறும் வாகனச் சேவையின் போது, 17 அரிய ஆன்மீகப் புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன. திருமலையில் உள்ள உணவகங்களில் தேவஸ்தான சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். தேவஸ்தானம் விதித்த நிபந்தனைகளை மீறாமல், குறைந்த விலையில் பக்தர்களுக்கு உணவுப் பண்டங்களை விற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.