ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அ.தி.மு.கவின் முக்கிய பிரமுகர் ஒருவரை சிபிசிஐடி போலீஸார் இன்று அதிரடியக கைது செய்துள்ளனர்.
ஆவின் கூட்டுறவு நிலையங்களில் இருந்து சேகரிக்கப்படும் பால், சென்னைக்கு வரும் வழியில் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு, அதற்கு பதிலாக அதே அளவு தண்ணீர் கலக்கப்படுவதாக சிலநாட்களுக்கு முன்னர் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியானது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில், இந்த வழக்கு திடீரென சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது.
இந்த கலப்படத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்ததாரரரும், அதிமுக பிரமுகருமான வைத்தியநாதன் என்பவர் தலைமறைவானார். ஆனால் இன்று அவர் சிபிசிஐடி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அதிமுக பிரமுகரான அவரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.