கங்கை நதியை தூய்மைப்படுத்த சுமார்18 ஆண்டு காலம் ஆகும் என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் பாஜகவின் கனவு திட்டமான கங்கை நதியை தூயமைப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றுவோம் என கடந்த பாராளுமன்றத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதா கட்சி உறுதி மொழி கொடுத்தது. அதேபோல் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்த பின்னர் இதற்கென ஒரு துறையே ஒதுக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கின் மீதான விசாரணையில், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் செயல் திட்ட அறிக்கை ஒன்றை சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அநத அறிக்கையை பார்த்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மத்திய அரசின் திட்டத்தைப் பார்த்தால் கங்கையை தூய்மைப்படுத்த 200 ஆண்டுகள் ஆனாலும் சுத்தப்படுத்த முடியாது போல் தெரிகின்றது என்று கடும் கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக இது தொடர்பாக படிப்படியான செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அடுத்து இன்று மத்திய அரசு, கங்கையை சுத்தப்படுத்துவது தொடர்பான செயல்திட்டம் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், ”2,500 கி.மீ. நீள கங்கையை 3 கட்டங்களாக சுத்தப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. முதல் கட்டத்துக்கு 3 ஆண்டுகளும், 2வது கட்டத்துக்கு 5 ஆண்டுகளும், 3வது கட்டத்துக்கு 10 ஆண்டுகளும் ஆகும் என்று எதிர்நோக்குகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.