கடந்த சில நாட்களுக்கு முன் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தின் கதை இதுதான் என சில ஊடகங்கள் பரபரப்பான செய்தியை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது இந்த படம் ஹாலிவுட் படம் ஒன்றி அப்பட்டமான காப்பி என்ற தகவல் இணையத்தில் பரபரப்பாக பரவி வருகிறது.
கடந்த 1939ஆம் ஆண்டு வெளியான The Hunchback of Notre Dame என்ற படத்தின் அப்பட்டமான காப்பிதான் ஷங்கரின் ‘ஐ’ என பரவலாக ஃபேஸ்புக், மற்றும் டுவிட்டர் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
William Dieterle என்பவர் இயக்கிய இந்த திரைப்படத்தின் கதையும், ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதாக ஃபேஸ்புக்கில் ஆதாரபூர்வமாக படங்களுடன் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
‘ஐ’ படத்தின் டீஸரில் வரும் பெரும்பாலான காட்சிகள் இந்த படத்தின் சாயலில் இருப்பதாகவும், அந்த படத்தின் கதாநாயகன் Charles Laughton என்பவரின் வேடம் அப்படியே விக்ரமின் கோர முகத்துடன் ஒத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் பேட்டியளித்த ‘ஐ’ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் இது ஒரிஜினல் படைப்புதான் என்றும், உலகளவில் தமிழர்களைத் தலைநிமிரச் செய்யப்போகும் ஒரு படம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்று பாராட்டப்பட்ட இயக்குனர் ஷங்கர் உண்மையிலேயே அந்த பட்டத்திற்கு தகுதியானவர்தானா? அல்லது இவரும் மற்ற இயக்குனர்களை போல ஹாலிவுட் படத்தை காப்பியடித்துதான் படம் எடுக்கின்றாரா? என்பது தீபாவளி தினத்தில் ‘ஐ’ வெளியானவுடன் தெரிந்துவிடும்.