முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான்கு வருட சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் அளித்த தீர்ப்பு குறித்து தமிழகத்தில் பல்வேறு தரப்பில் இருந்து பலவிதமான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், திரையுலகினர்களிடம் இருந்து இந்த தீர்ப்புக்கு எவ்வித கருத்துக்களும் விமர்சனங்களும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் விஜய் ரசிகர்கள் மட்டும் இனிப்பு கொடுத்து இந்த தீர்ப்பை கொண்டாடியதாக பல்வேறு ஊடகங்கள் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
மேலும் விஜய் பர்சனலாகவே தலைவா, துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற படங்களுக்கு ஜெயலலிதா ஆட்சியின்போது பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளார் என்பது உண்மைதான். இருந்தாலும் தமிழகத்தை சேர்ந்த, 7 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் பக்கத்து மாநிலத்தில் அதுவும் பல்வேறு கருத்துவேறுபாடுடைய ஒரு மாநிலத்தில் சிறையில் வைத்திருக்கும்போது தமிழனாக மனதளவில் ஒரு சிறு வருத்தத்தை கூட தெரிவிக்காமல் இனிப்பு வழங்கி இந்த தீர்ப்பை கொண்டாடுவது என்பது மிகவும் கேவலமான செயல் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
2016ஆம் ஆண்டு இளையதளபதி விஜய்தான் முதலமைச்சர் என்கிற ரீதியில் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறித்து பொதுமக்கள் வேடிக்கையாகவும் விநோதமாகவும் பார்த்து வருகின்றனர். நான்கு படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தால் சூப்பர் ஸ்டாரையே மறந்துவிடும் நமது மக்கள் விஜய் போன்றவர்களை முதல்வராக ஏற்றுக்கொள்வார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.
ஒருவேளை இந்த இனிப்பு வழங்கிய சம்பவம் விஜய்க்கு தெரியாமல் கூட நடந்திருக்கலாம். இருப்பினும் செய்தி தெரிந்தவுடன் விஜய்யிடம் இருந்து எவ்வித மறுப்பு அறிக்கையும் வெளியாமல் உள்ளதுதான் பெரும் சந்தேகத்தை கிளப்புகிறது. விஜய் இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்தி அவரது புகழுக்கு இழுக்கு நேராத வண்ணம் காப்பாற்றிக்கொள்வது அவரது கடமை என்பதே பலரது கருத்தாக இருக்கின்றது.
இன்றைய இளையதலைமுறையினர் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது விஜய் மட்டும்தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. அவர் சினிமாவில் சாதிக்க வேண்டியது இன்னும் அதிகம் இருக்கின்றது. இதற்கு முன்னால் முதல்வர் கனவு காரணமாக சினிமாவில் சம்பாதித்த புகழையும் பணத்தையும் இழந்த சீனியர் நடிகர்களின் நிலையை எண்ணிப்பார்த்து, விஜய் ஆக்கபூர்வமான நடவடிக்கையை தனது ரசிகர்கள் மீது எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.