சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பெர்த் அணியிடம் லாகூர் லயன்ஸ் அணி படுதோல்வி அடைந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அரையிறுதுக்கு தகுதி பெற்றுள்ளது.
6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் பெங்களூர் நகரில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ் அணியும் ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லாகூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில் பெர்த் அணியை 78 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான நிலை லாகூர் அணிக்கு ஏற்பட்டது. அதற்கேற்றவாறு லாகூர் லயன்ஸ் பந்துவீச்சில் ஆரம்பத்தில் அனல் பறந்தது. பெர்த் அணி 62 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததால் லாகூர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என தோன்றியது. ஆனால் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் மிட்செல் மார்சும், பிராட் ஹாக்கும் லாகூரின் பந்து வீச்சை துவம்சம் செய்து சென்னை அணிக்கு உதவினர்.
பெர்த் அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெர்த் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. லாகூர் வீழ்ந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்கலின்றி அரைஇறுதிக்கு முன்னேறியது. சென்னை அணி அரைஇறுதியில், பி பிரிவில் முதலிடம் பிடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை ஐதராபாத்தில் நாளை சந்திக்கிறது.