சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஜெயலலிதா, யாரையும் சந்திக்க விரும்பவில்லை என பெங்களூர் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு பதிலாக முதலமைச்சர் பதவியேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டவுடன் சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்திக்க உடனடியாக பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர்கள் சிலரும் ஜெயலலிதாவை சந்திக்க சென்றிருந்தனர்.
ஆனால், நேற்று காலை ஜெயலலிதாவை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பார் என கூறப்பட்ட நிலையில், மாலை வரை அவர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. இதையடுத்து நேற்று மாலை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்னை திரும்பினார்.
இதுகுறித்து பெங்களூர் சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ”ஜெயலலிதாவை சந்திக்க தமிழக முதலமைச்சருக்கு நாங்கள் அனுமதி அளித்தோம். ஆனால், ஜெயலலிதா யாரையும் சந்திக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.