உத்தபிரதேச மாநிலத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியதால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாரணாசியில் இருந்து கோரக்பூர் சென்று கொண்டிருந்த கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரயிலும், லக்னோவில் இருந்து பரூனி நோக்கி சென்று கொண்டிருந்த பரூனி எக்ஸ்பிரஸ் ரயிலும் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக்கொண்டது.
இந்த விபத்தில், கிரிஷாக் ரயில் வேகமாக மோதியதால், பரூனி எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெளியேறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக விபத்து நடந்த இடத்திலேயே பலியாகினர். மேலும், 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஒருசிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக சென்ற மிட்புக்குழுவினர், மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். ரயில் வழித்தடத்தை மாற்றும்போது ஏற்பட்ட தவறினால் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்துள்ளதாகவும், இதனால்தான் விபத்து ஏற்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து காரணமாக கோராக்பூர்-வாராணாசி பாதையில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 50,000 ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. லக்னோ-0522223042, கோரக்பூர்-05512203265, சாப்ரா-09771443941