உலக நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இபோலா நோயின் காரணமாக அமெரிக்காவில் முதல் முறையாக ஒருவர் பலியாகியுள்ளதாக திடுக்கிடும் செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் இருந்து அமெரிக்காவின் டெக்ஸாஸý நகருக்கு வந்த அந்த நபருக்கு இபோலா வைரஸ்தாக்கியிருந்ததை அமெரிக்க மருத்துவர்கள் சில நாட்களுக்கு முன்னர் கண்டுபிடித்தனர்.
அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக டெக்ஸாஸ் ஹெல்த் பிரஸ்பைடேரியன்’ என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சைக்கு பலனின்றி மரணம் அடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லைபீரியாவில் இருந்து பலர் இபோலா நோயினால் பாதிக்கப்பட்டு அமெரிக்கா வந்து சிகிச்சை செய்து கொண்டிருக்கும் நிலையில் முதன்முதலாக அமெரிக்காவில் ஒருவர் இபோலா நோயினால் மரணம் அடைந்தது அமெரிக்கர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் இந்த நோய், 6,574 பேரைத் தாக்கியுள்ளது எனவும், 3,091 பேர் இந்த நோயால் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.