சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி அ.தி.மு.க. சார்பில் இன்று புதுச்சேரி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு அடைப்பு குறித்து புதுவை நகர அ.தி.மு.க. செயலாளர் ரவீந்திரன் கூறுகையில், ”தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டு கர்நாடக நீதிமன்றம் தவறான தீர்ப்பை அளித்து, சிறையில் அடைத்துள்ளது.
எனவே, ஜெயலலிதாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வற்புறுத்தி நாளை (4ஆம் தேதி) புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
புதுவை மாநில அ.தி.மு.க., நகர அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, எம்.ஜி.ஆர். மன்றம், இலக்கிய அணி, வக்கீல் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட கட்சியின் அனைத்து பிரிவுகளின் சார்பிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும்.
ஜெயலலிதாவை விடுதலையாக்க கோரி நடக்கும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு வர்த்தக நிறுவனங்கள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.