பாரத பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க பயணம் மேற்கொண்டபோது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்று விமானம் ஒன்றில் செயலிழந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வளவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தும் மோடி விமானத்தில் எப்படி வெடிகுண்டு வந்தது என்பது குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஐந்து நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொண்டபோது, அவர் பயணம் செய்ய இருந்த விமானத்தில் கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவசரமாக பயன்படுத்தப்படுவதற்காக, மாற்று விமானமாக ஏர்-இந்தியா ஜம்போ விமானம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருட்ந்தது.
மோடி வெற்றிகரமாக அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய பிறகு அந்த மாற்று விமானம் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு நேற்று முதல் வந்தது. இந்நிலையில் டெல்லியில் இருந்து ஐதராபாத் வழியாக இந்த விமானம் சவுதி அரேபியாவின் ஜெட்டா என்ற நகருக்கு இன்று காலை சென்றடைந்தது.
அங்கு அந்த விமானம் பரிசோதனை செய்யப்பட்ட போது பயணிகளின் இருக்கைக்கு கீழே செயலிழந்த நிலையில் கையெறி குண்டு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக விமானத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனைக்கு பின்னர் விமானத்தை விடுவித்தனர். தற்போது விமானம் ஜெட்டாவில் இந்திய அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விமானம் சற்று நேரத்தில் கேரளா மாநிலம் கோழிகோட்டிற்கு திரும்பஇருந்தது.
மோடியின் பயணத்திற்கு பயன்படுத்த பட இருந்த விமானத்தில் கையெறி குண்டு இருந்தது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.