முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் நாளை அதாவது அக்டோபர் 7-ஆம் தேதியன்று மூடப்படும் என்றும், பள்ளி நிர்வாகிகளும், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்போவதாகவும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகி தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் வெளியிட்ட இந்த அறிவிப்பால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து கூறியுள்ள கம்யூனிஸ்ட் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், ” போராட்டம் நடத்தும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு இருப்பினும் தனியார் பள்ளிகள் அறிவித்துள்ள போராட்டம், மாணவர்கள் நலனோ, ஆசிரியர்கள் நலனோ, கல்வித்துறை கோரிக்கையோ சம்பந்தப்பட்டது அல்ல. பொதுநலன் சம்பந்தப்பட்டதும் அல்ல. மாறாக நீதிமன்றத்தால் ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக அரசியல் மற்றும் சுயநோக்கங்களுக்காக நடத்தப்படுவதாகும்.
எனவே, அரசு நிர்வாகம் உரிய முறையில் தலையிட்டு ஆளுங்கட்சியினரின் மிரட்டல்களையும், தனியார் பள்ளி நிர்வாகங்களின் பள்ளிமூடல் நடவடிக்கையையும் தடுத்து நிறுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்துகிறது” என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.