இந்தியாவின் மங்கள்யான் விண்கலத் திட்டத்தை கேலி செய்யும் வகையில் கார்ட்டூன் வெளியிட்ட அமெரிக்காவின் பிரபல பத்திரிகை நியூயார்க் டைம்ஸ் இதழ், தனது செயலுக்காக மன்னிப்புக் கோரியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நாடுகளின் குழுவில், மிகக் குறைந்த செலவில் விண்கலம் அனுப்பிய இந்தியா இணைவதைக் குறிப்பிடும் வகையில் ஒரு கேலிச் சித்திரம் வரையப்பட்டிருந்தது.
அந்த கார்ட்டூன் படத்தில் வேட்டி கட்டிய ஒருவர், மாட்டை கையில் பிடித்தபடி, மேற்கத்திய நாட்டினர் இருக்கும் அறைக்கதவைத் தட்டும் காட்சி இருந்தது. இந்தப் படத்துக்கு இந்தியா தரப்பில் இருந்தும், மற்ற நாடுகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. ஃபேஸ்புக்கிலும் பெரும்பாலானோர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
அந்த கார்ட்டூனுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்ததை பார்த்த நியூயார்க் டைம்ஸ் இதழ் அதிர்ச்சி அடைந்து தனது கேலிச்சித்திரத்துக்காக மன்னிப்புக் கோருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. செவ்வாய் ஆராய்ச்சி என்பது இனி யாருக்கும் தனிப்பட்ட உரிமையாக இருக்காது என்பதைக் குறிப்பிடுவதே இந்தக் கேலிச்சித்திரத்தின் நோக்கம் என்றும் அந்தச் செய்தியில் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.