கடையடைப்பு, போராட்டம் வேண்டாம். முதல்வரின் அறிவிப்புக்கு வணிகர்கள் வரவேற்பு.

protestகடையடைப்பு வேண்டாம்; வேலைநிறுத்தம் வேண்டாம்’ என்ற, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பை,வரவேற்பதாக வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாகபல்வேறு அமைப்புகள், வணிகர்களும் கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

நேற்று, ஜாமின் வழங்க, கர்நாடக ஐகோர்ட் மறுத்த நிலையில், மீண்டும் சென்னை உள்பட ஒருசில இடங்களில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த சிலர் வற்புறுத்தியதாக வந்த தகவலை அடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் கடையடைப்பு போராட்டமோ, வன்முறையோ வேண்டாம். தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு  வணிகர்கள், பொதுமக்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர்

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், ”தீபாவளி நேரம் என்பதால், வணிகர், மக்களை பாதிக்கும் வகையில் கடைகள் மூடவைக்க வேண்டாம் என, கோரிக்கை வைத்தோம். முதல்வர் பன்னீர்செல்வம், ‘கடையடைப்பு வேண்டாம்; வேலைநிறுத்தம் செய்ய வேண்டாம்’ என, அறிவித்து உள்ளார். இதை வரவேற்கிறோம்,” என்றார்.

தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் சங்க தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், ”முதல்வரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இனி, கடையடைப்பு செய்ய எந்த நிர்பந்தம் இருக்காது என, கருதுகிறோம். அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்ற அறிவிப்பும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும்,” என்றார்.

Leave a Reply