பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் அதிமுகவினர்கள் உள்பட பொதுமக்கள் யாரும் எந்தவிதமான வன்முறையிலும் ஈடுபட வேண்டாம். கடைகளை அடைக்க சொல்லி யாரும் வற்புறுத்த வேண்டாம் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் தாரக மந்திரமான, ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்பதற்கேற்ப, தமிழ்நாடு அமைதியான சூழலில், வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனினும், தமிழக அரசு மீது களங்கம் கற்பித்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்து விடலாம் என்று பகல்கனவு கண்டு கொண்டிருக்கும் சிலர், சட்டம் – ஒழுங்கு குலைந்துவிட்டதாக, கடந்த சில நாட்களாக, விஷமப் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து, தலைமைச் செயலகத்தில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலர் மோகன்வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், டி.ஜி.பி., ராமானுஜம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ‘தமிழகத்தில், சட்டம் – ஒழுங்கு சீராக உள்ளது. மக்களின் அன்றாடப் பணிகளுக்கு, எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை’ என, தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மீதுள்ள அன்பால், பாசத்தால், மாறான பற்றால், மக்களும், சில அமைப்புகளும், தாங்களாக உணர்ச்சிவசப்பட்டு நடத்தும் அறவழிப் போராட்டங்களுக்கு, தமிழக அரசை இணைத்து பேசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. வளர்ச்சி திட்டங்கள், விரைவாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதில், ஜெயலலிதா உறுதியாக இருந்தார். கடந்த, 40 மாதங்களாக, அதை செயல்படுத்தி காட்டினார். அவரது வழியில், வளர்ச்சி திட்டங்கள், மக்களை சென்றடைந்து வருகின்றன. வளர்ச்சிப் பணிகள், விரைவாக நடந்து வருகின்றன. மொத்தத்தில், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.
தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய, ஜெயலலிதாவின் – 2023 தொலைநோக்கு திட்டம் மற்றும் 2014ம் ஆண்டு தொழில் கொள்கை ஆகியவற்றில் உள்ள இலக்குகளை அடைவதற்கான வழியில், தமிழகத்தில் உள்ள அமைப்புகளும், சங்கங்களும், மக்களும், தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியினரின் மாய வலையில் விழ வேண்டாம் என, தமிழக மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான எந்த நடவடிக்கையையும், ஜெயலலிதா விரும்ப மாட்டார்.
எனவே, கடையடைப்பு, வேலைநிறுத்தம் என, எந்தவிதமான நடவடிக்கையிலும், யாரும் ஈடுபட வேண்டாம். இதுவே, ஜெயலலிதாவிற்கு, நமது அன்பை, ஆதரவை, மாறா பற்றை, பாசத்தை வெளிப்படுத்தும் செயலாகும். இவ்வாறு, முதல்வர் தெரிவித்து உள்ளார்.