ஜெயலலிதாவை வேறு மாநிலத்திற்கு மாற்றும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை என்றும் இதுகுறித்து உச்சநீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும் என்றும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த இரண்டு வாரங்களாக அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவை பெங்களூரு சிறையில் இருப்பதால் கர்நாடகா மாநிலத்திற்கு பளு அதிகரித்துள்ளது என்றும் எனவே, அவரை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என கர்நாடக அமைச்சர் ஒருவர் கருத்து கூறியிருந்தார். மேலும், ”ஜெயலலிதாவை பெங்களூர் சிறையில் வைத்திருப்பதால், கர்நாடக போலீசாருக்கு கூடுதல் வேலைப் பளு ஏற்பட்டுள்ளதாகவும், இரு மாநில உறவில் நல்லிணக்கம் கெடும் சூழ்நிலையும் உண்டாகியுள்ளதாகவும் முன்னள் பிரதமர் தேவகவுடாவும் கருத்து கூறியிருந்தார்.
ஆனால் இந்த விஷயத்தில் முடிவு செய்ய கர்நாடக அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் ‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதான் ஜெயலலிதாவின் வழக்கு கர்நாடக நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. எனவே, உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஜெயலலிதாவை வேறு மாநிலத்திற்கும் மாற்றும் நடவடிக்கையை கர்நாடக அரசு தன்னிச்சையாக எடுக்க முடியாது என்றும் கர்நாடக முதல்வர் சித்தரமைய்யா கூறியுள்ளார்.