மனதில் தைரியமும், நம்பிக்கையும் நிறைந்த, மேஷ ராசிக்காரர்களே!
உங்கள் ராசி நாதன் செவ்வாய் ஒன்பதாம் இடத்தில் சனி பகவானின் மூன்றாம் பார்வையை பெற்றுள்ளார். சூரியன், ராகு, புதன் நற்பலன் தருவர். பணச் செலவில் சிக்கனம் பின்பற்ற வேண்டும். மற்றவர் பார்வையில் உங்கள் மீது மதிப்பு, மரியாதை கூடும். தாய்வழி சொந்தங்களின் உதவி கிடைக்கும்.புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். எதிர்ப்பாளரால் வருகிற தொந்தரவு விலகும். இல்லறத் துணையின் பேச்சு, செயலில் குறை காண வேண்டாம். தொழில், வியாபாரம் செழித்து பண வரவு கூடும். பணியாளர்கள், பொறுப்புணர்வுடன் பணிபுரிவர். பெண்கள், பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள், நல்ல நெறிகளை பின்பற்றுவர்.
பரிகாரம்: சிவபெருமானை வழி படுவதால் தொழில் வளர்ச்சியும், பண வரவும் கூடும்.
பெருந்தன்மை குணத்தால் அதிக நன்மை பெறும், ரிஷப ராசிக்காரர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் அனுகூலமாக உள்ளார். சனி, கேது நற்பலன் தருவர். பேசும் வார்த்தையில் நிதானம் வேண்டும். அதிக விலையுள்ள பொருள் இரவல் கொடுக்க, வாங்கக் கூடாது. இஷ்ட தெய்வ அருள் பலம், வாழ்வில் முன்னேற புதிய வழியைத் தரும்.புத்திரரின் சேர்க்கை, சகவாசம் அறிந்து பக்குவமாக அறிவுரை சொல்லுங்கள். உடல் நல ஆரோக்கியம் சீராகும். இல்லறத் துணையின் கூடுதல் அன்பு, பாசம் மனதில் நெகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் வியத்தகு அளவில் வளர்ச்சி பெறும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். குடும்ப பெண்கள், கணவர் வழி சார்ந்த உறவினர்களின் நன்மதிப்பு பெறுவர். மாணவர்கள், பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.
பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால், குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும்.
நேர்மறை எண்ணமும், வசீகர பேச்சும் கொண்ட மிதுன ராசிக்காரர்களே!
உங்கள் ராசிநாதன் புதன், தொழில் ஸ்தான அதிபதி குரு உச்ச பலத்துடன் அனுகூலமாக உள்ளனர். சுக்கிரன் நீசமாக இருப்பினும் நற்பலன் தருகிறார். உடன் பிறந்தவர்களின் கருத்துக்களை குறை சொல்ல வேண்டாம். வாகன பயன்பாடு சீராக இருக்கும்.புத்திரர் விரும்பிய பொருளை, அதிக தரத்துடன் வாங்கித் தருவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். இல்லறத் துணை, கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழிலில் வருகிற இடையூறு சரி செய்வீர்கள். பணியாளர்கள், தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்வர். பெண்கள், தெய்வ வழிபாட்டில் ஆர்வம் கொள்வீர்கள். மாணவர்கள், நற்குணம் உள்ளவரின் நட்பை பெறுவர்.
பரிகாரம்: தன்வந்தரி பகவானை வழிபடுவதால், உடல் நலம் ஆரோக்கியம் பெறும்.
கருணை மனதுடன் பிறருக்கு இயன்ற உதவி புரியும், கடக ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ள சூரியன், சுக்கிரன், ராகு நற்பலன் தருவர். புதிய முயற்சியினால் சில நன்மை பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வீடு, வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும்.புத்திரர், தன் குறைகளை சரி செய்து புதிய சிந்தனைகளுடன் செயல்படுவர். ஆறாம் இடத்தில் உள்ள செவ்வாயின் அனுகூல அமர்வு, எதிர்ப்புகளை பலமிழக்க வைக்கும். இல்லறத் துணை, உங்களின் நற்குணம் பாராட்டுவார். தொழில், வியாபாரம் வளர தேவையான உதவி கிடைக்கும். பணியாளர்கள், குறித்த காலத்தில் இலக்கு நிறைவேற்றுவர். பெண்களுக்கு உடல் நல ஆரோக்கியம் பலம் பெறும். மாணவர்கள், புதிய கருத்துக்களை அறிவதில் ஆர்வம் கொள்வர்.
பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் தொழில், வியாபாரம் வளம் பெற தேவையான உதவி கிடைக்கும்.
மனதில் சரியென உணர்வதை துணிந்து செயல்படுத்தும், சிம்ம ராசிக்காரர்களே!
இந்த வாரம் உங்கள் ராசிக்கு சுக்கிரன், சனி, தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். சமூக நிகழ்வுகளுக்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். பேசும் வார்த்தையின் வசீகரம் சில நன்மை பெற்றுத் தரும். வெளியூர் பயண ஏற்பாடு தாமதமாகலாம்.புத்திரரின் உடல் நலத்திற்கு உரிய மருந்து சிகிச்சை உதவும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, மனதில் நம்பிக்கை வளரும். இல்லறத் துணையின் ஆலோசனையை ஏற்பீர்கள். தொழில், வியாபாரம் திருப்திகர அளவில் இருக்கும். பணியாளர்களுக்கு, எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். பெண்கள், பணச் செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். மாணவர்கள், சாகச விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால், மனதில் புதிய நற்சிந்தனை உருவாகும்.
உலக நடப்புகளை அறிவதில் ஆர்வமுள்ள, கன்னி ராசிக்காரர்களே!
உங்கள் ராசியில் உள்ள சுக்கிரன், பதினொன்றாம் இடத்தில் உள்ள குரு மட்டுமே நற்பலன் தருவர். தகுதி மீறிய செயல்களில் ஈடுபட வேண்டாம். சிலர், சுயலாபம் பெற உங்களை புகழ்ந்து பேசுவர். அவர்களிடம் விலகுதால் பணம், பொன்னான நேரத்தை பாதுகாக்கலாம். தாயின் தேவையை நிறைவேற்றுவதால், குடும்ப ஒற்றுமை வளரும்.புத்திரரின் மனக்குறை தீர உதவுவீர்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் வேண்டும். இல்லறத் துணை உங்களின் நற்குணம் பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் சராசரி நிலை இருக்கும். பணியாளர்கள், கெடுபிடி குணம் உள்ளவரிடம் பணக்கடன் பெற வேண்டாம். பெண்கள், தாய் வீட்டு உதவி பெறுவர். மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.
பரிகாரம்: துர்க்கையம்மனை வழிபடுவதால், துன்பம் விலகி நன்மை சேரும்.
தன்னைப் போல பிறர் நலனிலும் அக்கறை கொண்ட, துலாம் ராசிக்காரர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் தன, சப்தம ஸ்தான அதிபதி செவ்வாய் நற்பலன் தருவர். மீன கேது ஞானம் தருவார் என்பதற்கு ஏற்ப, நற்சிந்தனைகள் மனதில் உருவாகும். எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். முருகப் பெருமானின் நல்லருள் பலம் துணை நிற்கும்.
புத்திரரின் மந்தமான செயல்களை ஒழுங்குபடுத்துவீர்கள். எதிர்ப்பாக நடந்தவரும் உங்களின் நற்குணம் உணருவர். இல்லறத் துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு, நல்லோரின் உறுதுணை கிடைக்கும். பணியாளர்கள், பொறுமை குணத்தால் சில நன்மை பெறுவர். பெண்கள், கலை அழகு மிக்க பொருள் வாங்குவர். மாணவர்கள், தன் கடமை உணர்ந்து செயல்படுவர்.
சந்திராஷ்டமம்: 11.10.14 நள்ளிரவு 12:01 மணி முதல், 13.10.14 இரவு 9:42 மணி வரை.
பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவதால் நல்லோரின் அறிமுகம், உதவி கிடைக்கும்.
எந்நாளும் நற்குணம் பின்பற்றுவதில் ஆர்வமுள்ள, விருச்சிக ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு சனி, செவ்வாய், கேது தவிர மற்ற கிரகங்கள் அளப்பரிய வகையில் நற்பலன் தருவர். மனதில் தெளிவு, செயலில் உற்சாகம் மிகுந்திருக்கும். புதிய திட்டம் மேற்கொள்வீர்கள். உறவினர், நண்பரின் ஆதரவு கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.புத்திரர், ஆன்மிக கருத்து அறிவதில் ஆர்வம் கொள்வர். எதிரியால் வரும் இடர் விலக உரிய வழிமுறை காண்பீர்கள். இல்லறத் துணையின் கூடுதல் அன்பு, பாசம் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற தேவையான அரசு உதவி எளிதாக கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகை வந்து சேரும். பெண்கள், ஆடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்கள், கூடுதல் பயிற்சியினால் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.
சந்திராஷ்டமம்: 13.10.14 இரவு 9:43 மணி முதல் 16.10.14 காலை 7:40 மணி வரை.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவதால் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும்.
நல்ல வாய்ப்புக்களை தவறாமல் பயன்படுத்தும், தனுசு ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு தர்ம கர்மஸ்தான அதிபதிகளாகிய சூரியன், புதன் பத்தாம் இடத்தில் அனுகூலமாக உள்ளனர். லாப ஸ்தானத்தில் சனி பகவான் உச்சம் பெற்றிருக்கிறார். இரக்க சிந்தனையுடன் எவருக்கும் உதவுவீர்கள். பணிகளில் முழு அளவிலான நன்மை கிடைக்கும். வாகன பராமரிப்பு பணச் செலவு கூடும்.புத்திரர், உங்கள் அன்பில் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வர். எதிர்ப்புகளை இனம் கண்டு விலகுவீர்கள். இல்லறத் துணையின் பேச்சு, செயல் குறையை பொறுத்துக் கொள்வது ஒற்றுமை வளர்க்கும். தொழில், வியாபார வளர்ச்சி முன்னேற்றம் பெறும். பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்கும். பெண்கள், பிறருக்காக பணப் பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள், படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 16.10.14 காலை 7:41 மணி முதல், 18.10.14 மாலை 6:49 மணி வரை.
பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபடுவதால், மனக்கவலை மாறி சாந்தம் ஏற்படும்.
மனதில் அன்பும், ஆன்மிக பணியில் ஆர்வமுள்ள மகர ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு கேது, குரு, சுக்கிரன் நற்பலன் தருவர். பேச்சில் நிதானம் பின்பற்றி சில நன்மை பெறுவீர்கள். இளைய சகோதரர் சொல்லும் கருத்து, வாழ்வு சிறக்க புதிய வழி காட்டும். வீடு, இடம் மாற நினைத்த திட்டம் சிலருக்கு நிறைவேறும்.புத்திரர் கேட்ட பொருள் வாங்கித் தர, தேவையான பண வரவு கிடைக்கும். எதிரியின் கெடு செயல் உணர்ந்து அனுகூலம் தற்காத்துக் கொள்வீர்கள். இல்லறத் துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் உதவுவார். தொழிலில் இடையூறை சரி செய்து, வளர்ச்சியை நோக்கி நடைபோடுவீர்கள். பணியாளர்கள், கூடுதல் வேலை வாய்ப்பை தவறாமல் பயன்படுத்துவது நல்லது. பெண்கள், சேமிப்பு பணத்தை வீட்டுச் செலவுக்கு பயன்படுத்துவர். மாணவர்கள், குறைகளை சரி செய்து படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
சந்திராஷ்டமம்: 18.10.14 மாலை 6:50 மணி முதல், அன்று நாள் முழுவதும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால், வாழ்வில் பல நலமும் பெறுவீர்கள்.
சிறு நன்மையையும் பெரிதென போற்றி மகிழும், கும்ப ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் உள்ள புதன், சுக்கிரன், லாபஸ்தானத்தில் உள்ள செவ்வாய் நற்பலன் தருவர். உடல் நல ஆரோக்கியம் பேணுவதால் பணிகளில் ஆர்வமும், நேர்த்தியும் உருவாகும். இளைய சகோதரர், உதவிகரமாக செயல்படுவர். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் ஏற்படும். வெளியூர் பயணம் சில நன்மையை பெற்றுத் தரும்.புத்திரர், நற்செயல்களால் பெருமை தேடித் தருவர். எதிர்மறையான விஷயங்கள் சமரச தீர்வுக்கு வரும். இல்லறத் துணை உங்களின் எண்ணங்களை பிரதிபலிப்பார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்ள சூழ்நிலை உதவும். அரசியல்வாதிகளுக்கு, பதவி பெற அனுகூலம் உண்டு. பெண்களுக்கு, உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கிலேசம் சரியாகும். மாணவர்கள், ஆராய்ச்சி மனப்பான்மையுடன் படிப்பீர்கள்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால், துவங்கும் நற்செயல் திருப்திகரமாக நிறைவேறும்.
நல்ல கருத்துக்களை தயக்கமின்றி ஏற்கும், மீன ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு குரு பகவான் மற்றும் சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். ஆன்மிக நம்பிக்கை தளராமல் பொறுப்புணர்வுடன் பணிபுரிவது நன்மை தரும். அக்கம் பக்கத்தவருடன் நட்புறவு பாராட்டுவதால், உங்கள் மீதான நல்ல எண்ணம் பாதுகாக்கலாம். வீடு, வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.புத்திரர், நண்பருக்கு இணையாக கருத்துக்களை பகிர்ந்து கொள்வர். எதிரி உங்களை குறைத்து மதிப்பிட இடம் தரக்கூடாது. இல்லறத் துணையிடம் தேவையற்ற விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். இயந்திரப் பிரிவு பணியாளர்கள், பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்றவும். பெண்கள், தெய்வ வழிபாடு திட்டமிட்டபடி நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள், ஆசிரியரின் வழிகாட்டுதல் படி நடப்பது நல்லது.
பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுவதால், எதிர்ப்பு விலகி அனுகூல பலன் வந்து சேரும்.