ஜெயலலிதாவை அடிக்கடி திவ்யஸ்ரீ என்ற பெண் அதிகாரி சந்தித்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசின்ஹா தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இன்றுடன் 17வது நாளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கின்றார். இந்நிலையில் அவரை தமிழக சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து கூறிய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசின்ஹா கடந்த மாதம் 27ஆம் தேதி சிறைக்கு வந்த நாளில் இருந்து இதுவரை ஜெயலலிதா யாரையும் சந்தித்து பேசவில்லை. அவருடன் சசிகலா, இளவரசி ஆகியோர் மட்டுமே உள்ளனர்.
சிறையில் நான் அவரை சந்தித்தபோது “எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. நான் நலமாக உள்ளேன்” என்று கூறினார்.. சசிகலா, இளவரசி ஆகியோர் மட்டும் ஒரு சில பார்வையாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு மீது தீர்ப்பு கூறப்பட்ட பிறகு கர்நாடக சிறையில் இருந்து ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்படும் ஆனால் ஜெயலலிதா இதுவரை தன்னை தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தன்னை தமிழகசிறைக்கு மாற்றவேண்டும் என்று மனு அளித்தால் மட்டுமே இது சாத்தியம். அதே நேரத்தில் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தின் அனுமதி தேவை இல்லை. இரு மாநில அரசுகளே கலந்து பேசி இதுகுறித்து முடிவு செய்யலாம். எனினும் சுப்ரீம் கோர்ட்டில் ஒருவேளை அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் இந்த பிரச்னை எழாது.
தமிழ்நாட்டு மக்களுக்கு நான் ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். சிறையில் ஜெயலலிதா உடல் ஆரோக்கியமாக உள்ளார். அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. அவரது உடல் நிலையை பற்றி யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஜெயலலிதாவை கவனிப்பதற்கு ஒரு பெண் அதிகாரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். அதனால் மைசூர் சிறையில் இருந்த பெண் சிறை அதிகாரி திவ்யஸ்ரீயை இங்கே அழைத்து வந்தோம். அவர் ஜெயலலிதாவை கவனித்துக் கொள்கிறார். அவர் அடிக்கடி ஜெயலலிதாவை சந்தித்து பேசுகிறார்” என்றார்.