வரும் 22ஆம் தேதி தீபாவளி திருநாள் வருவதை ஒட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியது. இவ்வருடம் 13 மணி நேர பட்டாசு விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் தீபாவளியையொட்டி, சிவகாசி, சென்னை பாரிமுனை பந்தர் வீதி பட்டாசு வியாபாரிகள் சார்பில், தீவுத்திடலில் பட்டாசு விற்பனை, கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இவ்வருடம் நேற்று முதல் விற்பனை தொடங்கியது. இந்த விற்பனை வரும் 23-ஆம் தேதிவரை, தினமும் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை பட்டாசுகள் விற்கப்படும்.
சென்னை தீவுத்திடலில் மொத்தம் 120 கடைகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கடைகளில் நேற்றே நல்ல விற்பனை ஆனதாக பட்டாசு வியாபாரிகள் கூறினர். இவ்வருடம் புதிய அறிமுகமாக “கிளாசிக் வீல்’ எனப்படும் சங்கு சக்கரம், தரையில் சுற்றியபடி மேலே எழும்பி 12 வண்ணங்களை வெளிப்படுத்தும் “சூப்பர் ஸ்டார்’, பூக்கள் போன்ற ஒளிச்சிதறலை வெளிப்படும் ஜாடுகர், 60 அடி உயரம் சென்று தங்கக் காசு மழை பொழியும் “கோல்ட் காயின்ஸ்’, தீயணைப்பு வாகனம் போல் சத்தமிடும் சைரன் வெடி, மூன்று, அதற்கு மேற்பட்ட வயது கொண்ட குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கிட்டிஸ் “ஜாய்’ எனப்படும் பூச்சட்டிகள், 75 செ.மீ. நீளமுள்ள கம்பி மத்தாப்பு, வெகு உயரத்தில் சென்று 240 முறைகள் வெடிக்கும் பட்டாசுகள் போன்ற 50-க்கும் மேற்பட்ட புதிய ரக பட்டாசுகள்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்து போன்ற அவசர காலங்களில் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக திடலைச் சுற்றி ஆறு நுழைவாயில்கள் தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதுடன், போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.