எபோலா நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கு ரூ.155 கோடி நிதியுதவி அளித்த ஃபேஸ்புக் நிறுவனர்.

facebook
 உலகம் முழுவதையும் பதற வைத்துக்கொண்டிருக்கும் எபோலா நோயை குணப்படுத்த நடந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்துக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவியும் இணைந்து 25 மில்லியன் டாலர்கள் நிதி உதவி செய்துள்ளனர். இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.155 கோடி ஆகும்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்துதான் உலகம் முழுவதும்  பரவி வருகிறது எபோலா நோய்.  இதுவரை இந்த நோய்க்கு 4,447 பேர் பலியாகி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களில் 10,000 புதிய நோயாளிகள் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்படுகின்றனர். ஸ்பெயின், டென்மார்க், அமெரிக்கா போன்ற பிற நாடுகளிலும் தற்போது எபோலா நோய் பரவி விட்டது. மேலும் பல நாடுகளிலும் இந்த நோய் மிக வேகமாக பரவும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் இந்நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிப்பது ஒன்றுதான் தீர்வு என்று முடிவு செய்த அமெரிக்க அரசு, எபோலா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் என்ற அமைப்பை தொடங்கியது. இதில் பல மருத்துவர்கள் எபோலா நோயிற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த அமைப்புக்கு  25 மில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிப்பதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இன்று கூறியுள்ளார்.

இந்த தொகையை தனது மனைவி பிரிஸ்ஸில்லாவுடன் இணைந்து வழங்குவதாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் எபோலா நோயை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் எச்.ஐ.வி., போலியோ போன்ற கொடிய நோய்களுக்கு உலகம் போராடி கொண்டிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டுவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply