அருணாச்சலப் பிரதேச எல்லைப்பகுதியில் ரூ. 40,000 கோடி செலவில் புதிய சாலை அமைக்க மத்திய அரசு அதிரடியாக திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இந்தியாவின் இந்த திட்டம் குறித்து அருணாச்சல பிரதேசத்திற்கு அவ்வப்போது உரிமை கொண்டாடும் சீனா கவலை தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச எல்லையில் சமயம் கிடைக்கும் போதேல்லம் அத்து மீறி தனது ராணுவத்தை ஊடுரும் சீனா, தங்கள் நாட்டு வரைபடத்தில் அடிக்கடி அருணாச்சல பிரதேசத்தையும் தங்கள் நாட்டுடன் இணைத்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவிற்கு உரிய பகுதி என்று அடித்து கூறிவரும் இந்தியா, சீனாவுக்கு தனது எதிர்ப்பை அடிக்கடி பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது அருணாச்சல பிரதேச எல்லையில் சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை அமைத்து தனது கட்டமைப்பை சீனா வலுப்படுத்தியுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ள இந்தியா, அதே எல்லையில் பிரமாண்டமான சாலை திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி அருணாச்சலப் பிரதேசத்தில் சர்வதேச எல்லை ஒட்டி 2000 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.40,000 கோடி செலவில் புதிய சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் விரைவில் பெறப்படும் என அதிரடியாக அறிவிப்பு செய்துள்ளார்.
இந்த திட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹாங் லீ, அருணாச்சல எல்லையில் சாலை அமைக்கும் திட்டம் இருநாடுகளுக்கு இடையே உள்ள நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்றும் அத்துடன் எல்லையில் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும் இந்தியா இந்த மிரட்டலை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.