தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று கூறிய தமிழக கவர்னருக்கு நேற்று திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த பாராட்டுக்கு கிடைத்த பரிசு என்னவோ? என்று நேற்று ஒரு அறிக்கையும் விடுத்திருந்தார். இந்த அறிக்கைக்கு சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக கவர்னர் பதவியை களங்கப்படுத்தும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. கவர்னருக்கு மேலானவர்கள் தான் தமிழ்நாட்டை கவனிக்க வேண்டும் என்று சொன்னால், தமிழ்நாட்டை ஜனாதிபதி தான் மேற்பார்வையிட வேண்டும் என்று சொல்ல வருகிறார் என்று அனைவருக்கும் நன்றாக புரியும்.
தி.மு.க. ஆட்சியின்போது நடைபயிற்சி செய்கிறபோது வெட்டி கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், பத்திரிகை அலுவலகத்தில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட இளைஞர்கள், நில மோசடியில் மக்களை வாட்டி வதைத்த அராஜகங்கள், கொலை குற்றவாளிகளை தமிழக அமைச்சரே சேலம் சிறைச்சாலைக்கு சென்று பார்த்து ஆதரவு தந்தது, தினந்தோறும் எங்கு பார்த்தாலும் கொள்ளை, கொலை சம்பவங்கள் நிறைந்த அந்த கால ஆட்சியை தி.மு.க. தலைவர் கருணாநிதி மறந்து விட்டார்.
தனக்கு பிடித்ததை யார் பேசினாலும், பாராட்டுவது, எதிர்கருத்து எவர் சொன்னாலும் கேலி செய்வது, குறை சொல்வது, இது தி.மு.க. தலைவருக்கு கைவந்த கலையாகும். அ.தி.மு.க.வை தேர்தல் களத்தில் நேரில் சந்திக்காமல், குறுக்கு வழியில் ஆட்சியில் இருந்து வீழ்த்தி விடலாம் என்ற அவருடைய ஆசை கனவுபடிதான், கணக்குப்படிதான் இப்போது தமிழக கவர்னரை விமர்சிக்கிறார். இவர் என்ன சொன்னாலும், உலகமகா ஊழல் செய்த தி.மு.க.வை தமிழக மக்கள் என்றென்றும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது நிச்சயமான உண்மை.
கருணாநிதியின் அறிக்கையில், ‘கவர்னர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று பாராட்டியிருக்கிறார், இந்த பாராட்டுக்கு கிடைத்த பரிசு என்னவோ?’ என்று கேள்வி கேட்டு இருக்கிறார். இதைவிட ஒரு மாநில கவர்னரை இழிவுபடுத்திட யாராலும் முடியாது.
கவர்னர் பதவியை களங்கப்படுத்தும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டிருக்கும் அறிக்கை மீது மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.