ஜாமீனில் விடுதலையானதை தொடர்ந்து, 22 நாள் சிறைவாசத்துக்கு பின் ஜெயலலிதா இன்று மாலை 5 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து தனது போயஸ்கார்டன் இல்லம் சென்ற அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, ஜாமீன் பெற்ற ஜெயலலிதா நேற்றே சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், உச்ச நீதிமன்ற ஜாமீன் உத்தரவு நகலையும், ஜாமீன் உத்தரவாதத்தையும், சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவிடம் வழங்கி ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவை பெற வேண்டும்.
இதில், உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவு நகல் கிடைத்து அதை கர்நாடக நீதிமன்றத்தில் அளிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து நேற்று அவர் விடுதலை செய்யப்படவில்லை.
பிணை பத்திரம் தாக்கல்
இந்நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் தீர்ப்பு நகல் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 4 பேரும் தலா 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பிணை பத்திரம் தாக்கல் செய்தனர்.
சிறையிலிருந்து வெளியே வந்தார் ஜெயலலிதா
இதையடுத்து, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இந்த ஆணையை சிறைத்துறை அதிகாரியிடம் வழக்கறிஞர்கள் வழங்கினர். இதனையடுத்து அவர் பிற்பகல் 3.15 மணி அளவில், பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே வந்தார்.
சசிகலா, இளவரசியும் ஒரே காரில் பயணம்
ஜெயலலிதாவுடன் இதே வழக்கில் ஜாமீன் பெற்ற சசிகலா மற்றும் இளவரசியும் ஒரே காரில் பயணம் செய்தனர். ஆனால் சுதாகரன் மட்டும் தனியாக புறப்பட்டார்.
சிறப்பு விமானத்தில் சென்னை புறப்பட்டார்
சிறையிலிருந்து காரில் புறப்பட்ட ஜெயலலிதாவின் கார், பெங்களூரு ஹெச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தது. அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த தனி விமானம் மூலம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் சென்னை புறப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
இதனைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்த ஜெயலலிதாவுக்கு, விமான நிலையத்தின் வெளியே திரண்டிருந்த ஏராளமான அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களது வரவேற்பையும், வாழ்த்துக்களையும் புன்முறுவலுடன் கைகூப்பி ஏற்றுக்கொண்டார் ஜெயலலிதா.
போயஸ் கார்டனை நோக்கி…
அதனைத் தொடர்ந்து அவரது கார் போயஸ் கார்டன் நோக்கிச் சென்றது. வழி நெடுக ஏராளமான அதிமுகவினர், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சாலையின் இரு பக்கங்களிலும் திரண்டு நின்று அவரை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பி, வரவேற்றனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோட்டூர்புரம் விநாயகர் கோவிலில் வழிபாடு
இந்நிலையில் போயஸ்கார்டன் செல்லும் வழியில், கோட்டூர்புரத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பாக அவரது கார் நின்றது. அங்கு அவர் விநாயகரை வழிபட்டார்.
போயஸ்கார்டன் வந்தார்
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஜெயலலிதா, சுமார் 6 மணி அளவில் தனது போயஸ் கார்டன் இல்லத்தை வந்தடைந்தார்.
அங்கு அவரது வீடு முன்னர் திரண்டிருந்த ஏராளமான அதிமுகவினர், உற்சாக குரல் எழுப்பி, ஆடிப்பாடி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரவேற்றனர்.
முன்னதாக பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே வந்த ஜெயலலிதாவை ஏற்கனவே அங்கு சென்று முகாமிட்டிருந்த தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். மேலும் வழிநெடுகிலும் திரண்டிருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ஜெயலலிதாவை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பி, உற்சாக வரவேற்பு அளித்தனர்.