அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்ததில் தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில் ஜாமீனில் வெளிவந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அன்று மாலையே சென்னை திரும்பினார். இதுகுறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமலும், பத்திரிகையாளர்களை சந்திக்காமல் வீட்டுக்குள் இருந்த கருணாநிதி, இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வெளியானவுடன், நான் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. இது முக்கியமான வழக்கு என்பதால் எச்சரிக்கை உணர்வுடன் பொறுமையாக இருந்து, தீர்ப்பு முழுவதையும் கவனமாகப் படித்து விளக்கலாம் என்று எண்ணினேன்.
ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்பதற்காக நான் மகிழ்ச்சி அடையவும் இல்லை. தற்போது, உச்ச நீதிமன்றத்தில் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை பெற்றுவிட்டார் என்பதற்காக வருத்தப்படவும் இல்லை.
ஆனால், நான்தான் ஏதோ ஜெயலலிதா மீது பொய் வழக்குப் போட்டதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர். எனினும், நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா வழங்கியுள்ள தீர்ப்பில் வழக்கின் உண்மைத் தன்மையை விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என கருணாநிதி கூறியுள்ளார்.