விஜய், சமந்தா நடித்த ‘கத்தி’ திரைப்படத்தின் ரிலீஸை தமிழக விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கு ஒரு சோகமான செய்திதான் தற்போது வெளிவந்துள்ளது.
இன்று நடந்த கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால் கத்தி திரைப்படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆகாது என கூறப்படுகிறது.
கத்தி படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன், தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்ட சமாதான பேச்சுவார்த்தையில் ‘லைகா நிறுவனத்தின் லோகோவை எடுத்துவிட்டு ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முன்வந்தால், தங்கள் போராட்டத்தை நிறுத்திக்கொள்வதாக தமிழ் அமைப்புகளிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.
இந்த கோரிக்கைக்கு ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் ஒப்புக்கொண்டது. ஆனால் லைகா நிறுவனத்தலைவர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ‘கத்தி’ படம் ரிலீஸ் ஆகாவிட்டாலும் பரவாயில்லை. லோகோவை எடுக்க முடியாது என அவர் கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் கத்தி படம் பிரச்சனையின்றி வெளியாகும் சூழ்நிலை வந்தால் மட்டுமே படத்தை தியேட்டரில் வெளியிட முடியும் என அபிராமி ராமநாதன் உறுதியாக கூறியதாகவும், தெரிகிறது.
எனவே இந்த கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் முடிவடைந்ததால் கத்தி திரைப்படம் தமிழகத்தில் வெளியாகாது என கூறப்படுகிறது. மேலும் வெளிநாட்டிலும், வெளி மாநிலங்களிலும் கத்தியை ரிலீஸ் செய்தால், உடனடியாக திருட்டு டிவிடி தமிழகத்திற்கு வந்துவிடும் அபாயம் இருப்பதால் கத்தியை ரிலீஸை தள்ளி வைக்கலாமா என லைகா யோசித்து வருவதாக கூறப்படுகிறது.