மகாராஷ்ட்ராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா அமைக்கவிருக்கும் ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக தானாக முன்வந்து கூறியபோதிலும், பாரதிய ஜனதா கட்சி சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கவே விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றது. மேலும் ஒருசில பாஜக தலைவர்கள் தேசியவாத, சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் அல்லாத சிறிய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க ஆலோசனை கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.
பாரதிய ஜனதாவில் உள்ள அதிவானி போன்ற மூத்த தலைவர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கவே, விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கூட்டணியில் இருந்த இரு கட்சிகளும், தொடர்ந்து ஒரே பாதையில் பயணிக்கவே விரும்புவதாக அத்வானி கூறியுள்ளார்.
தேர்தலின்போது இரு கட்சித் தொண்டர்களிடையே ஒரு சில தொகுதிகளில் மோதல்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும் சிவசேனாவுடன் மீண்டும் கூட்டணி அமையும் பட்சத்தில், இரண்டு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் இணைந்து பணியாற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது என அம்மாநில பாரதிய ஜனதா தலைவர்கள் சிலர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.