பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே
*- திருஞானசம்பந்தர்*
கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடல் என்பதை உணர்த்தும் விரதம்தான் கேதார கௌரி விரதம். ஆயுள் முழுக்க ஆதர்ச தம்பதிகளாக வாழ்வதுதான் கணவன், மனைவியின் லட்சியமாக இருக்கும். அதை நிறைவேற்றித் தரும் வல்லமை இந்த விரதத்துக்கு உண்டு. சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் கோலம் பூண நேர்ந்தது இந்த விரதத்தால்தான்.
சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்நாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றி ஒன்றாகிய விரதமே கேதார கௌரி விரதமாகும்.
“கேதாரம்” என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய “கௌரி’ இவ் விரதத்தினை மேற்கொண்டதால் இந்த விரதம் கேதார கௌரி விரதம் எனப்படுகிறது.
KEDARNATH
சிவனுக்கு சமமான நிலையில் சக்தி அமையும் போது அது பராசக்தி எனப்போற்றப்படுகின்றது.
மனதில் வயல் போன்ற பசுமையான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு இறைவனை மனப்பூர்வமாக வணங்கினாலே போதும்
சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது.
பிருங்கி முனிவர், அதி தீவிர சிவ பக்தர்.
பிருங்கி முனிவர், கயிலாயம் போகும்போதெல்லாம் சிவனை மட்டும் வணங்கி வலம் வருவார். முனிவரோ வண்டாக உருமாறி சிவனுக்கும் பார்வதிக்கு இடையில் நுழைந்து சிவனை மட்டும் வலம் வந்தார். சிவனும் பார்வதியும் ஒன்று என நினைத்து இருவரையும் வணங்காமல் சிவனை மட்டும் அவர் வணங்குவது ஆணவப் போக்கு என நினைத்தார்.
தன்னைச் சுற்றி வந்தாலே அது தேவியையும் வலம் வந்ததுபோலத்தான் என்பதைப் புரிந்துகொள்ளாமல் பார்வதி தேவி கோபப்படுகிறாரே என வருத்தமடைந்தார் சிவன். சிவனுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டால்தான் தானும் சிவனும் ஒன்றாவோம் என நினைத்தார் தேவி. தன் உடலை சிவன் உடலுடன் ஐக்கியப்படுத்தும் பாக்கியம் கிடைக்கத் தவம் இருப்பதுதான் ஒரே வழி என்பதைப் புரிந்துகொண்டார் பார்வதி.
தன் எண்ணம் நிறைவேற பூலோகம் வந்த பார்வதி, ஒரு வயல்வெளியில் அமர்ந்து சிவனை நோக்கிக் கடுந்தவம் இருந்தார். மகேஸ்வரன், பூலோகத்துக்கு வந்து உமையவளுக்கு தரிசனம் தந்து அவரை ஆட்கொண்டார். ஒருநாளும் உமைப் பிரியாத வரம் வேண்டும்� என்ற பார்வதியின் வரத்தை ஏற்றார் சிவன். பிருங்கி முனிவர் தன்னை அவமானப்படுத்தியதாக நினைத்த தேவியின் ஆதங்கத்தைப் புரிந்துகொண்ட சிவனும் பார்வதியின் விருப்பத்தை நிறைவேற்றினார்; அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.
சிவனின் இந்தச் செயல் தேவியைக் குளிர்ச்சிப்படுத்தியது. இனி பிருங்கி முனிவர் மட்டுமல்ல, வேறு யாராலாம் தன்னையும் சிவனையும் பிரிக்க முடியாது என நிம்மதி அடைந்தார். இதுநாள் வரை சிவன் வேறு, சக்தி வேறு எனப் பிரித்துப் பார்த்தவர்கள் இனி, சிவனும் சக்தியும் ஒன்று என உணர்வார்கள் என்ற நம்பிக்கை சக்தி தேவிக்கு உண்டானது.
இப்படிக் கணவன் உடம்பில் ஒரு பாதியாகி, யாராலும் எந்த நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிய நாள்தான் கேதார கௌரி நாள்.
கேதார கௌரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ட தசமியில் ஆரம்பிக்க வேண்டும். அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க ஆசுதோஷியாகிய சிவன் மிக விரைவாகவே வரம் கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும்.
குறிப்பாக தீபாவளி அன்றோ, அல்லது தீபாவளிக்கு மறுநாளோ இந்த விரதமும் மேற்கொள்ளப்படுகிறது. தீபாவளித் திருநாள் குடும்பத்தின் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்.
கணவன் – மனைவியிடையே மாறாத அன்பை வளர்த்துக் கொள்ள உதவும் பண்டிகை. தான், தன் கணவர், தன் குழந்தைகள், வீட்டிலுள்ள பிற பெரியவர்கள் என்று அனைவரிடையேயும் அன்பும், பாசமும் நீடித்து நிலைக்க வைக்கும் கொண்டாட்டம்.
தம் மாங்கல்ய பலம் நீடிக்கவும், தன் மீதான கணவரின் அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற கேதார கௌரி விரதத்தை சுமங்கலிகள் கடைபிடிக்கிறார்கள்.
சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார்
.வேறுபாடுகள் இன்றி, வாழ்க்கையின் எந் நிலையில் இருப்போரும் இன் நோன்பினை கடைப்பிடித்து வரங்களை பெறமுடியும்.
சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐப்பசி அமாவாசை நாள்தான் கேதார கௌரி விரத நாள்.
தீபாவளி அன்று நோன்பிருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமிருந்து ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும்.
கேதார கௌரி விரத்தின் பிரசாதம் அதிரசம் ஆகும். வெல்லப்பாகு, பச்சரிசி மாவு கலந்து செய்யப்படும் பக்ஷணம் இது . பெண்கள் திருமணம் ஆகி செல்லும் போது இந்த அதிரசத்தை கேதாரீஸ்வரர் பிரசாதமாக கொடுத்து அனுப்பும் வழக்கும் இன்றும் உள்ளது.
இவ்விரதத்தை லட்சுமி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு , நோன்பு என்று பல பெயர்களில் தங்கள் தங்கள் குடும்ப வழக்கப்படி அழைப்பர்
கேதார கௌரி விரத திருக்கோவில் வழிபாடு: திருக்கோவில்களில் கேதார கௌரி விரதத்தன்று கேதாரீஸ்வரரையும், கௌரியையும் இரு கலசங்களில் ஆவாஹணம் செய்து அலங்கரித்து வைக்கின்றனர். விரதம் இருப்பவர்கள் தங்கள் வீட்டிலிருந்து அதிரசம் பழ வகைகள், இனிப்புகள், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, நோன்புக்கயிறு, கருகு மணி, காதோலை முதலியன பிரசாதமாக எடுத்து வந்து அம்மையப்பருக்கு நைவேத்யம் செய்து அர்ச்சனை செய்து விட்டுச் செல்கின்றனர். பல்வேறு ஆலயங்களில் இவ்வாறு கேதார பூஜை நடைபெறுகின்றது
இந்த பூலோகத்தில் கேதார கௌரி விரதத்தை மனப்பூர்வமாய் விரும்பி அனுஷ்டிப்பவர்களுக்கு அந்த பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் அனுகிரஹிப்பார் என்பது திண்ணம்.