மன்னார் வளைகுடா அருகே உருவாகியுள்ள காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் இன்று முதல் முன்று நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தீபாவளி தினமான புதன்கிழமை அன்று சற்று ஓய்ந்திருந்த மழை மீன்Dஉம் நேற்று காலையிலிருந்து பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி, மற்றும் சேரன்மகாதேவியில் 110 மில்லி மீட்டர் மற்றும் 100 மில்லி மீட்டர் மழை பதிவானது.
இந்நிலையில், மன்னார் வளைகுடா பகுதியில் நேற்று புதிதாக காற்று மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதால், அடுத்த இரு நாள்களுக்கு தமிழகம் முழுவதும் தொடர் மழை இருக்கும் என்றும், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை அறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட அதிக அளவு பெய்யும் என்று வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதை உறுதிப்படுத்தும் விதமாக மாநிலத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து, சாலைகள் அனைத்தும் வெள்ளக் காடாய் மாறியுள்ளது.