உத்தரப்பிரதேச மாநில அரசு மாணவர்களின் பயன்பாட்டிற்காக இலவசமாக அளித்த லேப்-டாப்கள் இணையத்தின் மூலம் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உ.பி. அரசு முடிவு செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் இலவச லேப் – டாப்பை விற்பனை செய்ய பிரபல இணையதளம் ஒன்றில் விளம்பரம் செய்துள்ளார். அந்த லேப்டாப்பை அவர் ரூ.14,000 க்கு விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இவரை போல பல மாணவர்கள் அரசு கொடுத்த இலவச லேப்டாப்பை இணையத்தின் மூலம் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து மொரதாபாத் மாவட்ட பள்ளி ஆய்வாளர் சர்வன் குமார் யாதவ் கூறுகையில், “இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்கள் இலவச மடிக்கணினிகளை விற்பதை மாநில அரசு தடுப்பது சுலபமல்ல. வேண்டுமானால், மாணவர்களிடம் இலவசமாக வழங்கப்பட்ட லேப்-டாப்பை அவர்களின் வருங்காலத்தை ஒளிமயமாக அமைத்துக்கொள்ள பயன்படுத்தும்படி அறிவுரை வழங்கலாம்” என்றார்.
உத்தரப்பிரதேசத்தில் 2012 ஆம் ஆண்டு அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவால் தொடங்கப்பட்ட இந்த `இலவச லேப்-டாப் `திட்டத்தின் மூலம், மொரதாபாத் மாவட்டத்தில் மட்டும், ரூ. 19,000 மதிப்புள்ள 24,143 லேப்-டாப்புகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.