கருணாநிதி, ஸ்டாலின் மீது திமுக வழக்கறிஞர் வழக்கு. பெரும் பரபரப்பு.

karunanidhiதி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகன் மீது திமுக கட்சியை சேர்ந்த ஒரு வழக்கறிஞரே வழக்கு தொடர்ந்துள்ளார். திமுக உட்கட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி இவர்கள் இருவர் மீதும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் சுரேஷ் குமார். இவர் தி.மு.க. வழக்கறிஞர் பிரிவில் உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க. உட்கட்சி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்த முறைகேட்டுக்கு கருணாநிதி மற்றும் ஸ்டாலினே பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி நெல்லை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், தி.மு.க. மற்றும் அதன் தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருவெற்றியூர் விஸ்வநாதன், தேர்தல் அதிகாரிகள் திருவிடை மருதூர் ராமலிங்கம், பி.டி.சி.செல்வராஜ் ஆகியோரை பிரதிநிதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த மனுவில், ”நான் தி.மு.க.வில் 20 வயது முதல் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறேன். கட்சி சார்பாக நடந்த போராட்டங்களில் பங்கெடுத்துள்ளேன். வழக்கறிஞராக இருப்பதால், கட்சியினர் மீது போடப்பட்ட பல வழக்குகளிலும் ஆஜராகி வருகிறேன். இந்த நிலையில், நெல்லை மாவட்ட தி.மு.க. உட்கட்சி தேர்தல்  நடந்தது. அப்போது பல வார்டுகளில் தேர்தல் நடத்தப்படவில்லை. ஆனால், அனைத்து வார்டுகளுக்கும் தேர்தல் நடந்ததாகவும், அதில் தேர்வான வேட்பாளர்களை கட்சி தலைமை அறிவிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே, உட்கட்சி தேர்தல்களில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதால், கட்சித் தலைமை நிர்வாகிகளை அறிவிக்க தடை விதிக்க வேண்டும். மேலும், முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு, வாக்காளர் பட்டியல்களை சம்பந்தப்பட்ட இடங்களில் ஒட்டி, முறையாக தேர்தல் நடத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நெல்லை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரனை டிசம்பர் 2ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

தி.மு.க. தலைமை மீது அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரே வழக்கு தொடர்ந்திருப்பது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply