வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால், தமிழகக் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், இந்தத் தாழ்வு நிலை, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மேலும் சில நாள்களுக்கு தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை மிதமான மழையோ, பலத்த மழையோ பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டமாக இருக்கும். ஒருசில இடங்களில் மழை பெய்யும்” என அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.