தலபெருமை:
அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார். சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி. எனவே, மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.
மகாவிஷ்ணு மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், மகாவிஷ்ணுவை, அம்பிகையின் அன்னையாகவும் கருதி வணங்குகிறார்கள். அபிராமி அம்பிகையின் பக்தரான சுப்பிரமணிய பட்டர், அம்பிகையின் முகத்தை நினைத்துக்கொண்டே, சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை, பவுர்ணமி என்று கூறிவிட்டார். எனவே மன்னர், அந்நாளை பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் மரணதண்டனை என்று சொல்லிவிட்டார்.
பட்டர் அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79ம் பாடல் பாடியபோது, அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது.அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை எரியச்செய்கிறார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர்.
காலசம்ஹார மூர்த்தி:
மிருகண்டு முனிவர் – மருத்துவதி அம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக பிள்ளை வரம் இல்லை. மிருகண்டு முனிவர் கடுந்தவம் இருந்ததன் காரணமாக ஈசன் குழந்தை வரம் அருளினார். குறைந்த ஆயுளுடனும், நிறைந்த அறிவும் உடைய குழந்தை பிறக்கும் என்று ஈசன் கூறினார். இதனையடுத்து தனக்கு பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு வளர்த்தார்.16 வயது ஆனவுடன் ஆயுள் பற்றிய கவலை குடும்பத்தாருக்கு பிறந்தது.
தன் பிறப்பில் உள்ள பிரச்சினையைத் தெரிந்து கொண்ட மார்க்கண்டேயன் சிவதலங்களாகச் சென்று வழிபட்டான். 107 சிவதலங்களை வழிபட்ட பின் 108 வது சிவதலமாக திருக்கடையூர் வந்தான். அப்போது அவனது இறுதிநாளும் வந்துவிட்டது. இங்கு சிவனை வேண்டினார்.எமன் அவரது உயிரைப்பறிக்க வந்தபோது, எமன் அவனது உயிரைப்பறிக்க நேராக அவரே வந்து விட்டார். எமனைக் கண்ட மார்க்கண்டேயர் நேரே ஓடிப்போய் அமிர்தகடேசுவரரை இறுகக் கட்டிக் கொண்டான். எமன் பாசக்கயிறை வீசினார். அவன் வீசிய பாசக்கயிறு மார்க்கண்டேயர் மீது மட்டுமே விழாமல் லிங்க உருவில் இருந்த அமிர்தகடேசுவரரையும் சேர்த்து சுருக்குப்போட்டு இழுத்தது.
சிவபெருமான் கோபம் கொண்டு என்னையுமா இழுக்கிறாய் என்று கூறி காலனை எட்டி உதைத்து சூலாயுதத்தால் சம்காரம் செய்துவிட்டார்.அத்தோடு, “”மார்க்கண்டா! நீ என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாய் இரு,” என்று அருளினார்.பின் காலன் சம்காரம் செய்யப்பட்டு விட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது. பூமிதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை.தேவி ஈசனிடம் முறையிட, கோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார். சிவன் எமதர்மனின் உயிரை எடுத்ததும், திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில்தான். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி, இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன், ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும், மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர்.
சாதாரணமாக காலசம்ஹாரமூர்த்தியை தரிசிக்கும்போது, எமனை பார்க்கமுடியாது. பூஜை செய்யும்போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி, கையில் சூலத்துடன் காட்சி தருவதை “சம்ஹார கோலம்’ என்றும், எமனுடன் இருப்பதை “உயிர்ப்பித்த கோலம்’ என்றும் சொல்கிறார்கள். ஆக, ஒரே சமயத்தில் “சம்ஹார’ மற்றும் “அனுக்கிர மூர்த்தியை’ தரிசிக்கலாம். இச்சன்னதியிலுள்ள பாலாம்பிகை பால (சிறுமி) வடிவில், இரு கரங்களுடன் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி, சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்.
சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல, இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திர தகடு ஒன்று உள்ளது. இதனை, “திருக்கடையூர் ரகசியம்’ என்கிறார்கள். முதலில் பாபகரேஸ்வரரையும், பின் சுவாமியையும், அடுத்து யந்திர தகட்டையும் வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் காலசம்ஹாரமூர்த்தி சன்னதிக்கு நேரே எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். அருகில் எருமை நிற்கிறது.
தீர்த்த சிறப்பு:
மார்க்கண்டேயர் சிவபூஜைக்காக காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தார். அவருக்காக சிவன், திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகே ஒரு கிணற்றில் கங்கையைப் பொங்கும்படி செய்தார். மார்க்கண்டேயர் அந்த நீரை எடுத்து சுவாமிக்கு பூஜை செய்தார். தற்போதும் இங்கேயே தீர்த்தம் எடுக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் யாரும் நீராடுவது கிடையாது. பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று இத்தீர்த்தத்தில் கங்கை பொங்கியது. இதன் அடிப்படையில் அன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள்.
மார்க்கண்டேயர் அமுதகடேசுவரர்க்கு அபிசேகம் செய்தபோது கங்கை நீருடன் இப்பிஞ்சிலமும் சேர்ந்து வந்ததாக ஐதீகம். பிஞ்சிலம் என்னும் சாதி மல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக்கூடியது.இங்கே இம்மலர் சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படுகிறது. மற்றவர்கள் இதை பயன்படுத்தக்கூடாது.இதன் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 தடவை அர்ச்சித்தற்கு சமம்.
சதாபிஷேகம்:
திருக்கடையூரில் பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90 வயது), சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருமணத்தின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் செய்கின்றனர். கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு, தம்பதியர் மீது ஊற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கிவிடுவதாக நம்பிக்கை. இந்த பூஜை செய்பவர்கள், அருகிலிருக்கும் கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரரையும் வழிபட்டால், இந்த வேண்டுதல் பூர்த்தியாவதாக ஐதீகம்.
திருக்கடையூரில் 60, 80ம் திருமணம் செய்பவர்கள் திதி, நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்கத்தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது. அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும். தினமும் சாயரட்சை பூஜையின்போது மட்டும் ஆதிவில்வவன நாதருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கச்சென்ற பாதாள குகை இருக்கிறது.
திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின், புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும். இத்தலத்து முருகனைக் குறித்து, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார்.
எமன் லிங்கத்தின் மீது பாசக்கயிறை வீசியதால் ஏற்பட்ட வடு இன்னும் சிவலிங்கத்திருமேனியில் உள்ளது. கால சம்கார மூர்த்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம், கம்பீரம் எல்லாம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி, வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார். பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம். அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார்.
நவகிரகங்கள் இங்கு கிடையாது. நவகிரகங்களுக்கு இங்கு பவர் இல்லை.கிரக சாந்தி செய்வோர் கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள். ராகு தோசங்கள் இங்கு கிடையாது. அம்பாள் மகா விஷ்ணு ஆபரணத்திலிருந்து உண்டானவள். 63 நாயன்மார்களில் காரி நாயனாரும், குங்கிலியக்கலய நாயனாரும் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து தொண்டு செய்து முக்தியடைந்தார்கள். அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் அவதரித்த புண்ணிய பூமியும் இதுதான்.
தல வரலாறு:
பிரம்மா சிவனிடம் ஞானஉபதேசம் பெற விரும்பி கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞானஉபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, இத்தலம் வந்து சிவனை வணங்கினார்.
சிவன் அவருக்கு காட்சி தந்து, ஞான உபதேசம் செய்து வைத்தார். இவரே இத்தலத்தின் மூலமூர்த்தி ஆதி வில்வவனநாதராக தனிசன்னதியில் அருளுகிறார். பின், பாற்கடலில் அமிர்தம் எடுத்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதை உண்ணச்சென்றனர். எனவே, விநாயகர் அதனை மறைத்து வைத்துவிட்டார்.பின் விநாயகரை வணங்கிய தேவர்கள், அமிர்த கலசத்தை வாங்கி சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அப்போது அமிர்த குடம் இருந்த இடத்தில் சுயம்புலிங்கம் உண்டானது. அமுதத்தில் இருந்து தோன்றியதால், “அமிர்தகடேஸ்வரர்’ என்றும் பெயர் பெற்றார்.
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும்.